பெல்டால் சிறுவன் மீது தாக்குதல்.... காப்பகம் மூடல் - அதிகாரிகள் நடவடிக்கை!
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த கோட்டைபாளையத்தில் தனியார் சிறுவர்கள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் 6 முதல் 18 வயது வரை உள்ள 9 சிறுவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் காப்பகத்தில் வசித்து வரும் நான்காம் படித்து வரும் 8 வயது சிறுவன் ஒருவரை அங்கு பணியாற்றும் காப்பாளர் செல்வராஜ் (64), பெல்டால் கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் காப்பகத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் தகவலறிந்து வந்த கோவில்பாளையம் போலீசார் காப்பக நிர்வாக அரங்காவலர் நிர்மலா மற்றும் சிறுவனை தாக்கிய காப்பாளர் செல்வராஜ் ஆகிய இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் காப்பகத்தில் விசாரணை மேற்கொண்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நிறைவடைந்ததை, தொடர்ந்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் சிறுவனை தாக்கிய செல்வராஜ் மீது புகார் மனு அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் காப்பாளர் செல்வராஜ் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் ஆதரவற்றோர் இல்லத்தை ஆய்வு செய்த போது காப்பகத்தில் போதுமான வசதிகள் இல்லாததை கண்டறிந்து அரசு அளித்த அங்கீகாரத்தை ரத்து செய்து இல்லத்தை மூட பரிந்துரைத்தனர். இந்த நிலையில் காப்பகத்தை மூடி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அங்கு வசித்த 9 சிறுவர்களில் நான்கு பேரை அன்னூருக்கும், மூன்று பேரை மேட்டுப்பாளையத்திற்கும், இருவரை உறவினர்களிடமும் ஒப்படைத்துள்ளனர்.