7 அடி பள்ளத்தில் கேட்ட இளைஞரின் அலறல் சத்தம் - உடனே பொதுமக்கள் செய்த செயல்!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சர்வீஸ் சாலையில், நெடுஞ்சாலைத் துறையினரால் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக, சாலையின் ஓரம் சுமார் 7 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத நிலையில், இன்று இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் எதிர்பாராத விதமாக இந்தப் பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.
பள்ளத்தில் விழுந்த இளைஞர், தனது இருசக்கர வாகனத்தின் அடியில் சிக்கிக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக ஓடி வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் ஒன்றிணைந்து, பெரும் சிரமத்துடன் இளைஞரையும், அவரது இருசக்கர வாகனத்தையும் பள்ளத்தில் இருந்து மீட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தைச் சுற்றி, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்தவிதமான தடுப்புகளோ, எச்சரிக்கை பலகைகளோ வைக்கப்படவில்லை என்பது பொதுமக்களின்
குற்றச்சாட்டாக உள்ளது.
இத்தகைய ஆழமான பள்ளங்கள், குறிப்பாக இரவு நேரங்களில் மிகவும் ஆபத்தானவை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, உடனடியாக பாதுகாப்பு தடுப்புகளை அமைக்க வேண்டும் என்றும், பணிகள் முடியும் வரை எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.