மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 11 வேட்பாளர்களின் பெயரை அறிவித்த சமாஜ்வாதி கட்சி!
மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 11 வேட்பாளர்களின் பெயரை சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் கீழ் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து சமாஜவாதி கட்சி போட்டியிடவுள்ளது. காங்கிரஸ் உடனான மக்களவைத் தொகுதிகள் இறுதி செய்யப்படாத நிலையில், 11 கட்சி வேட்பாளர்களின் பெயர்களை சமாஜ்வாதி அறிவித்துள்ளது. இது தொடர்பாக சமாஜவாதி கட்சி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் (எக்ஸ்) பதிவில் 11 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
— Samajwadi Party (@samajwadiparty) February 19, 2024
உத்தரப் பிரதேசத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதி நடைப்பயணம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ரேபரேலியில் நடைபெற்ற நிலையில், தற்போது அமேதி தொகுதியில் ராகுலின் நடைப்பயணம் நடைபெற்று வருகிறது. இந்த நடைப்பயணத்தில் சமாஜ்வாதியின் கட்சித் தலைவரும் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
எனினும், மக்களவைத் தொகுதி வரையறை இறுதி செய்யப்படும் வரை காங்கிரஸ் நடைப்பயணத்தில் பங்கேற்கப்போவதில்லை என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். தொகுதிகள் முடிவு செய்யப்பட்டதும் நடைப்பயணத்தில் பங்கேற்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், ஏற்கனவே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.