"படித்த இளைஞர்களை ஏமாற்றிய திமுக அரசுக்கு மக்கள் பாடத்தைப் புகட்டுவார்கள்" - அன்புமணி ராமதாஸ்!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழக அரசுத் துறைகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக 2026-ஆம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான அட்டவணையை த்மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளுக்கான முதல் தொகுதி பணிகள், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கான 4-ஆம் தொகுதி பணிகள் என மொத்தம் 6 போட்டித் தேர்வுகள் மட்டும் தான் அடுத்த ஆண்டில் நடத்தப்படவுள்ளன. இது எந்த வகையிலும் போதுமானவையல்ல.
2025-ஆம் ஆண்டில் மொத்தம் 7 வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருந்தது. அதன்படி 7 போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கையை வெளியிட்டு விட்ட டி.என்.பி.எஸ்.சி, அவற்றில் சில தேர்வுகளை நடத்தி முடித்துள்ளது. இந்த தேர்வுகளின் மூலம் 9757 பேர் அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை மிக மிகக் குறைவாகும்.
2026-ஆம் ஆண்டில் 6 போட்டித் தேர்வுகள் மட்டுமே நடத்தப்படவுள்ளன என்பதையும், அத்தேர்வுகளுக்கான பணிகளின் காலியிடங்களாக தமிழக அரசின் சார்பில் காட்டப்படும் எண்ணிக்கையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது அதிகபட்சமாக 6 ஆயிரம் பேருக்குக் கூட அடுத்த ஆண்டில் வேலை வழங்கப்படாது என்பது தான் உண்மை. அரசு வேலைகளுக்காக 1.30 கோடி படித்த இளைஞர்கள் காத்திருக்கும் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 6 ஆயிரம் பேருக்கு மட்டும் அரசு வேலை வழங்குவதாக திமுக அரசு கூறுவது கேலிக் கூத்தாகும்.
திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, கடந்த நான்கரை ஆண்டுகளில் அரசு பணிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பேர் ஓய்வு பெற்றுள்ளனர்.அதனால் ஏற்படும் காலியிடங்களையும் சேர்த்தால் மொத்தம் 7 லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக சேர்த்தே 40 ஆயிரம் பேருக்கு தான் நிரந்தர அரசு வேலைகளை திமுக அரசு வழங்கியிருக்கிறது. படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் திமுக அரசு எந்த அளவுக்கு துரோகம் செய்துள்ளது என்பதற்கு இதுவே சான்று ஆகும்.
சட்டப்பேரவைத் தேர்தலில் 505 வாக்குறுதிகளை திமுக அளித்திருந்தது. அவற்றில் 66 வாக்குறுதிகளை மட்டும் தான் திமுக அரசு முழுமையாக நிறைவேற்றியுள்ளது. மீதமுள்ள 439 வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அந்த வகையில் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக மட்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக 439 துரோகங்களை செய்திருக்கிறது என்று தான் கருத வேண்டும். அந்த 439 துரோகங்களிலும் மிகவும் மோசமானது படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதாகக் கூறி ஏமாற்றியது தான்.
அரசு வேலை வழங்குவதாகக் கூறி படித்த இளைஞர்களை ஏமாற்றிய திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள். அதைத் தொடர்ந்து அமையும் புதிய அரசில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளின் அட்டவணை நீளமாகும்; குறைந்தது 50 ஆயிரம் நான்காம் தொகுதி பணிகள் உள்பட 2026-ஆம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி மூலம் வழங்கப்படும் அரசு பணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.