மாலத்தீவு அதிபர் தேர்தலில் இந்தியாவுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபட்ட ஆளும் கூட்டணி!
மாலத்தீவு அதிபர் தேர்தலில் இந்தியாவுக்கு எதிராக பரப்புரையைக் கட்டமைத்த ஆளும் மாலத்தீவு முற்போக்குக் கட்சி மற்றும் மக்கள் தேசிய காங்கிரஸ் கூட்டணி, தவறான தகவல்களைப் பரப்ப முயற்சித்தது என்று ஐரோப்பிய ஒன்றிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலத்தீவில் அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அந்நாட்டு அரசின் அழைப்பை ஏற்று, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அமோர் தலைமையிலான குழு தேர்தலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டது. 54% வாக்குகளுடன் தேர்தலில் வென்று அந்நாட்டின் புதிய அதிபராக மக்கள் தேசிய காங்கிரஸின் முகமது மூயிஸ் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பதவியேற்றார்.
இந்நிலையில், மாலத்தீவு அதிபர் தேர்தல் குறித்து இறுதி அறிக்கையை ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்புத் திட்டப் பணி வெளியிட்டது. தேர்தல் சமயத்தில் 11 வாரங்கள் மேற்கொண்ட கண்காணிப்புப் பணிகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாலத்தீவில் இந்தியாவின் தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய ஆளும் கூட்டணியின் பிரசாரம் அமைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீங்குமா? - ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு..!
அதிபரான இப்ராஹிம் முகமது சோலிக்கு எதிராக 'பிபிஎம்-பிஎன்சி' கூட்டணித் தலைவர்கள் அவதூறு கருத்துகள் வெளியிட்ட நிகழ்வுகளும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இது குறித்து அந்த அறிக்கையில் தெரிவித்ததாவது;
"பிபிஎம்-பிஎன்சி கூட்டணி பிரசாரத்தில் தீவிரமான இந்திய எதிர்ப்பு உணர்வுகள் அடங்கியிருந்தன. மாலத்தீவில் இந்திய ராணுவ வீரர்கள் இருப்பது குறித்த கவலையின் அடிப்படையிலான இந்திய-விரோத பிரசாரத்தில் இணையவழியாக தவறான தகவலைப் பரப்பவும் முயன்றனர். மாலத்தீவு தேர்தல் களத்தில் பிரசார நிதி சேகரிப்பு, செலவுகள் வெளிப்படைத்தன்மை மற்றும் மேற்பார்வை இல்லை. அரசு ஊடகம் உள்பட ஊடகங்களின் அரசியல் சார்பைப் பதிவு செய்ய முடிந்தது.
தொழில்நுட்பரீதியாக நன்கு நிர்வகிக்கப்பட்ட தேர்தலை மாலத்தீவு தேர்தல் ஆணையம் நடத்தியது. நாட்டின் சட்ட அமைப்பு நேர்மையான தேர்தலுக்கு வழிவகுக்கிறது. வாக்காளர் மற்றும் வேட்பாளர் பதிவு ஆகியவை அனைவரையும் உள்ளடக்கிய செயல்முறைகளாக இருந்தன. முக்கிய வேட்பாளர்கள் மட்டுமின்றி 8 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
அரசியல் போட்டியில் இருந்து பெரும்பாலும் விலகியுள்ள பெண்கள், தேர்தல் நிர்வாகத்திலும் குறைந்த அளவே இருந்தனர். தேர்தல் பிரசாரத்தில் சமத்துவத்தைக் குறைக்கும் நடைமுறைகளாக வாக்குக்கு பணமளித்தல், அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துதல் போன்றவை மற்ற குறைபாடுகள் ஆகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவல்களுக்கு எதிராக உண்மை சரிபார்ப்புக் குழு, பொது மற்றும் அரசியல் வாழ்க்கையில் பெண்களின் பங்களிப்பை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் என மாலத்தீவின் எதிர்கால தேர்தல்களை மேம்படுத்துவதற்கான 20 பரிந்துரைகளும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.