Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“India - Srilanka இடையேயான கடற்பகுதியில் இருநாட்டு மீனவர்களுக்கும் உரிமை” - இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க-விற்கு காங். எம்.பி. சுதா கடிதம்!

01:31 PM Sep 25, 2024 IST | Web Editor
Advertisement

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 37 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்கக் கோரி இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள அநுர குமார திசாநாயக்க-விற்கு மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதா கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

கடந்த செப். 21-ம் தேதி தமிழக மீனவர்கள் 37 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களது 3 விசைப் படகுகளையும் கைப்பற்றினர். நெடுந்தீவு கடற்பகுதியில் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 37 மீனவர்கள் எல்லை தாண்டியக் குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியின் போது கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்ற இலங்கை கடற்படையினர், விசாரணைக்கு பின்னர் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதனிடையே, கடந்த செப். 22-ம் தேதி மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா, கைது செய்யப்பட்ட 37 மீனவர்களையும், அவர்களின் 3 விசைப்படகுகளையும் விடுவிக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், “தமிழக மீனவர்கள் நமது கடற்பரப்பில் மீன்பிடித் தொழில் செய்ய ஏதுவாக உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்திய கடற்படை மூலம் செய்யவேண்டும். மேலும் 37 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை உடனடியாக விடுவிக்க இலங்கை அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எனது தலைமையில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் மீனவர்களுடன் இணைந்து ஈடுபடுவேன்” என தெரிவித்தார்.

தொடர்ந்து, நேற்று (செப். 24) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுத்திட நடவடிக்கை எடுக்கவும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களிடம் அதிக அளவில் அபராதம் வசூலிப்பதைத் தடுத்திடவும், மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவித்திடக்கோரி இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க-விற்கு மயிலாடுதுறை காங். எம்.பி. சுதா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவம் தொடர்பாக இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இந்தியா இலங்கைக்கு இடைப்பட்ட கடற்பகுதியில் இருநாட்டு மீனவர்களுக்கும் பாரம்பரிய மீன்பிடி உரிமை இருப்பதால், பரஸ்பர மரியாதையை நாம் கடைபிடிக்க வேண்டுமென்றும், கடந்த காலங்களில் இலங்கையை ஆண்டவர்கள் செய்த அதே தவறுகளை இலங்கையின் புதிய நம்பிக்கையாக பார்க்கப்படுகிற அநுர குமார திசாநாயக்க செய்ய வேண்டாமென்றும் கோரிக்கை வைத்திருக்கிறேன். இலங்கையில் புதிய அரசு அமைந்திருக்கும் சூழலில் இந்திய அரசு ராஜாங்க ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்து மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்” இவ்வாறு பதிவிட்டு அக்கடிதத்தை இணைத்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை 53 தமிழக மீனவர்களின் படகுகளை சிறைப்பிடித்து 396 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
AICCAnura Kumara DissanayakeCongressFishermanJaishankarJVPMayiladuthuraiNPPPresidentSrilankasrilanka navysudha
Advertisement
Next Article