கைதுக்கான காரணங்களை 'எழுத்துப்பூர்வமாக' வழங்க வேண்டும் : உச்ச நீதிமன்றம் உத்தரவு
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மிஹர் ராஜேஷ் ஷா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட அவருக்கு தான் எதற்காக கைது செய்யப்பட்டோம் உள்ளிட்ட எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அதனால் தனது கைதை சட்ட விரோதமானதாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்து நீதிபதிகள், வழக்குகளில் ஒருவர் கைது செய்யப்படும் போது எந்த குற்றப்பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்படுகிறார் என்றும் அதற்கான காரணத்தையும் சம்பந்தப்பட்ட நபருக்கு எழுத்து பூர்வமாக அவருக்கு தெரிந்த மொழியில் காவல்துறையினர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்
மேலும் ஒருவேளை கைது செய்ததற்கான காரணத்தை உடனடியாக தெரிவிக்க இயலவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் 2 மணி நேரத்திற்கு முன்பாக அந்த விவரங்களை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும். அவ்வாறு கைது செய்யப்படுவதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட நபருக்கு கொடுக்கப்படவில்லை என்றால் அந்த கைது நடவடிக்கை என்பது சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்டு, அந்நபர் விடுவிக்கப்படுவார் என்று உத்தரவிட்டுள்ளனர். அத்துடன் இந்த நடைமுறை என்பது சட்டவிரோத பண பரிவர்த்தனை, UAPA சட்டத்துக்கு மட்டுமல்லாமல் அனைத்து ஐ.பி.சி வழக்குகளுக்கும் பொருந்தும் எனவும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.