"களத்தில் இறங்கி உதவுவது தான் உண்மையான அரசியல் பணி" - இயக்குநர் தங்கர் பச்சான்
வேடிக்கைப் பார்த்துக் கொண்டு குறை கூறுவதை விட்டுவிட்டு அனைத்து கட்சியினர்களும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது தான் உண்மையான அரசியல் பணி என இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்தது. பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும், வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இது மட்டுமல்லாது ரயில் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.
இதனால் மக்கள் வீடுகளில் முடங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்திலும் மழைநீர் புகுந்துள்ளதால் வீட்டு உபயோக பொருள்கள் அனைத்தும் நாசமாகியுள்ளன. அத்தியாவசிய பொருள்கள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே சிலர் குறைகூறி வருகின்றனர். இந்த நிலையில் இயக்குநர் மற்றும் நடிகர் தங்கர் பச்சான் இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டு உள்ளதாவது:
இதையும் படியுங்கள்: சென்னையில் நடைபெற இருந்த பார்முலா-4 கார் பந்தயம் ஒத்திவைப்பு!
"மக்கள் வெள்ளத்துயரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில் உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். வேடிக்கைப் பார்த்துக் கொண்டு குறை கூறுவதை விட்டுவிட்டு அனைத்து கட்சியினர்களும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது தான் உண்மையான அரசியல் பணியாகும்.
இவ்வேளையில் உச்ச நட்சத்திர திரைப்பட நடிகர்களும், அவரவர்களின் லட்சக்கணக்கான ரசிகர்களும் களத்தில் இறங்கி உதவினால் மக்களின் நிலமை விரைவில் சீரடையும். இதை உடனே செய்தால் தான் உங்களை உயர்த்தி விடும். இந்த மக்களுக்கு நடிகர்களாகிய நீங்கள் செய்யும் நன்றி கடன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.