அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்த 'KANNUR SQUAD' படத்தின் நிஜ நாயகர்கள்!
மதுரை அலங்காநல்லூரில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன. 16) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியினை இன்று காலை 7 மணியளவில் போட்டியை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில், மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான 'KANNUR SQUAD' திரைப்படத்தின் நிஜ நாயகர்கள் குழுவாக ஜல்லிக்கட்டு போட்டியை காண இன்று அலங்காநல்லூர் வருகை தந்தனர். ஓய்வு பெற்ற கேரள காவல்துறை அதிகாரியான பேபி ஜார்ஜ் (ASI) மற்றும் அவரது குழுவினரின் உண்மை கதைதான் 'KANNUR SQUAD' என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்த ஓய்வு பெற்ற கேரள காவல்துறை அதிகாரி பேபி ஜார்ஜ், நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ”முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது. காவல்துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன" என தெரிவித்தார்.