“அடுத்த தேர்தலில் மனுநீதியா? சமநீதியா? என்ற கேள்வி எழுப்பப்படும்” - ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மேடைப் பேச்சு!
அடுத்த தேர்தல் என்று ஒன்று வந்தால், மனுநீதியா சமநீதியா என்ற கேள்விதான் எழுப்பப்படும் என மேனாள் நீதிபதி சந்துரு ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் நடிகரும் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார். இந்நிலையில் 2026 தேர்தலில் மன்னர் ஆட்சியை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும் என பேசி உள்ளார் நூலை உருவாக்கியவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் அர்ஜுனா..
இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சரும், இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவருமான அண்ணல் அம்பேத்கர் குறித்த தகவல்கள் இடம்பெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தகத்தின் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மேனாள் நீதிபதி சந்துரு, விசிக துணைப் பொதுச் செயலாளரும், நூலை உருவாக்கியவருமான ஆதவ் அர்ஜுனா, அம்பேத்கரின் பேரனான ஆனந்த் டெல்டுண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் விஜய். முதலாவதாக நூலை உருவாக்கியவரும், வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்தின் நிறுவனருமான ஆதவ் அர்ஜுனா பேசினார்.
அதைத் தொடர்ந்து பேசிய மேனாள் நீதிபதி சந்துரு, “அம்பேத்கர் நம் எல்லோருக்கும் தலைவர் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி இருப்பவர்கள் இங்கே வரப்போவதில்லை. அம்பேத்கர் இறக்கும் வரை அவரின் பல கருத்துகள் வெளியிடப்படாமல் இருந்தது. அம்பேத்கர் இறந்த பிறகு அவரின் ஆவணங்களை திரட்டி, நீதிமன்ற உத்தரவின் படி மகாராஷ்டிரா அரசுக்கு ஒப்படைக்கப்பட்டது. மகாராஷ்டிரா அரசு அதை வாங்கி வைத்துக் கொண்டு வெளியிடவே இல்லை. பலர் அழுத்தம் தந்த பிறகுதான் 1956-ல் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் 1988-ல் வெளியிடப்பட்டது. பதினாறு தொகுப்புகளை மகாராஷ்டிரா அரசு வெளியிட்டது.
அதற்குப் பிறகுதான் அம்பேத்கர் தன் வாழ்நாளில் இத்தனை எழுத்துகளை எழுதிக் குவித்திருக்கிறார் என்று பலருக்கும் தெரியும். அம்பேத்கருக்கு மாவட்ட நீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதி பதவிகள் வந்தபோது, அம்பேத்கர் ‘எனக்கு இந்த பதவியோ, இந்த சம்பளமோ தேவையில்லை. என்னுடைய மக்களுக்கு நான் வேலை செய்ய போகிறேன்’ என்று சொன்னார். 1936 முதல் 1956 வரை 20 ஆண்டுகள் அமைச்சரவையில் இருந்தார். அவ்வளவு காலம் இருந்தாலும் அவர் எழுதிய புத்தகத்தை அவரால் வெளியிட முடியவில்லை.
கடைசியில் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘நான் ஒரு புத்தகம் தயாரித்திருக்கிறேன். அதை வெளியிடுவதற்கு ரூ.40000 செலவாகும். அரசு கொடுத்தால் இதனை வெளியிடலாம். அதில் வரக்கூடிய வருமானத்தை திருப்பி கொடுத்துவிடுகிறேன்’ என எழுதினார் அம்பேத்கர். அவர் மறைந்து 68 ஆண்டுகள் ஆனாலும் இன்றைக்கு நாம் திரும்பத் திரும்ப பேசுகிறோமே அதுதான் அவரின் சிறப்பு. அம்பேத்கர் அப்படி என்ன சாதித்தார் என்று கேட்கலாம். இந்த நாடு சாதி அடிப்படையில் சாதிக்கொரு நீதி என்று இடத்தில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இருந்தபோது ஒரு அரசியல் சட்டத்தை தயாரித்தார்.
இதைத்தான் கடந்த ஓராண்டாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காட்டி வருகிறார். இதில் 397 பிரிவுகள் இருக்கிறது. இதில் 15-வது பிரிவை நீங்கள் பார்க்க வேண்டும். மதத்தின் பெயரிலோ, சமயத்தின் பெயரிலோ, சாதியின் பெயரிலோ, இடத்தின் பெயரிலோ இந்த அரசு யாரிடமும் வேறுபாடு காட்டாது என்று உரிமையை கொடுத்திருக்கிறார். அதுதான் இந்த சட்டத்தின் முதல் சாதனை. இந்த அரசியல் சட்டத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இதை காக்க வேண்டும் என்று சொல்பவர்கள் ஒரு பக்கம், தூக்க வேண்டும் என்று சொல்பவர்கள் மறுபக்கம். அடுத்த தேர்தல் என்று ஒன்று வந்தால்... மனுநீதியா சமநீதியா என்ற கேள்விதான் எழுப்பப்படும். எனவே, இந்த புத்தகத்தை எல்லோரும் வாங்கிப் படிக்க வேண்டும்" என்று கூறினார்.