“தமிழர்களின் பெருமை இசைஞானி...” - இளையராஜாவுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் சந்திப்பு!
இசையமைப்பாளர் இளையராஜாவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென சந்தித்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக பள்ளிக் கல்வித்துறை பல்வேறு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. முக்கியமாக, பெண்களின் கல்வியை ஊக்குவிப்பதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதில் ஒரு பகுதியாக 'பெண் கல்வி, உரிமைகள், விடுதலை' எனும் தலைப்பில் பெண் கல்வியையும், பெண் உரிமையையும் மக்களிடையே கொண்டு செல்லும் விதமாக விழிப்புணர்வு பாடல்கள் உருவாக்கப்பட்டன.
இசைத் தொகுப்பில் சமத்துவம் பேசும் பத்து பாடல்களை எழுத்தாளர்கள் அழகிய பெரியவன், பெருமாள் முருகன், கவிஞர் சுகிர்த ராணி, பாடலாசிரியர் ரமேஷ் வைத்யா, திருநங்கை செயற்பாட்டாளர் ரேவதி, பேராசிரியர் ரவி ஆகியோர் எழுதி இருந்தனர். இந்தப் பாடல்களை திரைப்பட இசை அமைப்பாளர்களும், பிரபலமான பாடகர்களும் இசை அமைத்து உருவாக்கியுள்ளனர். இந்த பாடல் உருவாக்கத்தில், மறைந்த பாடகியும், இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி முக்கிய பங்கு வகித்திருந்தார்.
பள்ளிகளில் காலை கூடுகைக்காக தயாரிக்கப்பட்ட சமத்துவம் பேசும் பத்து பாடல்களை, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த பாடல்கள் உருவாக்கத்திற்கு காரணமானவர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் அழைத்து பாராட்டினார்.
தமிழர்களின் பெருமை அய்யா இசைஞானி @ilaiyaraaja அவர்களை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம்.
பெண் கல்வியையும், பெண் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக @tnschoolsedu-ஆல் ‘பெண்-கல்வி, உரிமைகள், விடுதலை’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டது. அப்பாடல் உருவாக்கத்தில் சகோதரி… pic.twitter.com/46jMqaNghF
— Anbil Mahesh (@Anbil_Mahesh) May 16, 2024
இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இசையமைப்பாளர் இளையராஜாவை அவரது ஸ்டுடியோவில் இன்று நேரில் சந்தித்தார். இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி, ‘பெண்-கல்வி, உரிமைகள், விடுதலை’எனும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல் உருவாக்கத்தில், பவதாரிணியின் இசை பங்களிப்புக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பு குறித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனது எக்ஸ் தளத்தில் சிலாகித்து, புகைப்படங்களுடன் பகிரந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.