போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்!
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படியை பென்சனுடன் சேர்த்து வழங்க வேண்டும். புதிய தொழிலாளர்களை பழைய பென்சன் திட்டத்தில் சேர்க்க வேண்டும் உட்பட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்று 2வது நாளாக இன்றும் நடந்தது.
நேற்று தொடங்கிய இந்த போராட்டத்தில் எவ்வித முடிவுகளும் எட்டப்படாததாலும் தற்காலிக ஓட்டுநர்களை நியமித்து பேருந்துகளை இயக்கியதாலும், இன்றும் பல்வேறு பேருந்து நிலையங்கள் மற்றும் பல்லவன் இல்லம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த சிஐடியு அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி, இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிமனைகளில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 6 அம்ச கோரிக்கைகளில் பொங்கலுக்கு முன்பாக முதற்கட்டமாக அகவிலைப்படி 4 மாத தொகையை வழங்க போக்குவரத்து தொழிலாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் 2 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளார்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜன.19ஆம் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் போராட்டம் நடத்த ஊழியர்களுக்கு முழு உரிமை உள்ளது ஆனால் பொங்கல் பண்டிகை முடிந்த பின் போராட்டத்தை தொடரலாமே? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் ஜனவரி 11 முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்ப வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.