அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை தாக்கிய புகையான் பூச்சிகள் - விவசாயிகள் வேதனை!
மயிலாடுதுறையில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் புகையான் பூச்சி தாக்குதலால் கருகியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். சம்பா சாகுபடி செய்துள்ள நெருப்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளன.
இந்த சூழலில், தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக நெற்பயிர்களில் புகையான் பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதுவரையில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் கருகி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் இயற்கை சீற்றங்கள் காரணமாக விவசாயம் பாதிக்கும் நிலையில், மறுபுறம் பூச்சி தாக்குதல் காரணமாக விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
புகையான் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பல்வேறு பூச்சி மருந்துகள் அடித்தும் பயனில்லை எனவும் மேலும் நெற்பயிர்கள் கருகி வருவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகின்றனர். விரைவில் வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து புகையான் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்குவதோடு பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.