“மணிப்பூர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் போலீஸாரும் துணை போயுள்ளனர்!” - சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், போலீஸாரும் துணை போயுள்ளனர் என சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக மாறியது. இதனிடையே இரு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான வீடியோ வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுமார் 800-1000 எண்ணிக்கையிலான கும்பல் சம்பந்தப்பட்ட பெண்களின் குடும்பத்தைச் சேர்ந்த இருவரை கொலை செய்ததாக இந்த சம்பவத்தின் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் கடந்த ஆண்டு மே மாதம் 23ம் தேதி நடந்திருந்தாலும், இது தொடர்பான வீடியோக்கள், சமூக வலைதளங்களில் ஜூலை மாதம் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள் : பாலியல் விவகாரம்! – மஜத கட்சியிலிருந்து பிரஜ்வால் ரேவண்ணா இடைநீக்கம்!
மணிப்பூர் பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாடு முழுவதும் அரசியல் வேற்றுமை பாராது போராட்டங்கள் வெடித்தன.இதையடுத்து இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட 5 பேர் மற்றும் ஒரு சிறுவனை அம்மாநில போலீஸார் கைது செய்தனர்.
மணிப்பூர் பாலியல் வன்கொடுமை சம்பவம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ நீதிமன்றத்தில் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சிபிஐ குற்றப்பத்திரிகை தகவல்களின்படி :
"மெய்டேய் சமூகத்தை சேர்ந்தவர்கள், குக்கி-ஸோமி சமூகத்தை சேர்ந்த குடும்பத்தை தாக்கியுள்ளனர். அவர்கள் அங்குள்ள வனப்பகுதிக்குள் ஓடிச் சென்று ஒளிந்தனர். வன்முறை கும்பல் அவர்களை கண்டறிந்து குடும்பத்தினரை ஆளுக்கு ஒரு திசையாக இழுத்துச் சென்றனர். அப்போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ஜீப்பில் ஓடிச் சென்று ஏறியுள்ளனர்.
மேலும் ஜீப்பை எடுத்துச் சென்று தங்களை காப்பாற்றுமாறு போலீஸ் ஓட்டுநரிடம் அவர்கள் கதறியுள்ளனர். ஆனால் ஜீப் ஓட்டுநர், சாவி தன்னிடம் இல்லை என கூறியுள்ளார். பின்னர், ஜீப்பை ஓட்டிச் சென்று கலவர கும்பல் அருகே நிறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தின்போது மேலும் சில போலீஸாரும் உடனிருந்தனர். அதன் பிறகு தொடர்ந்து அடுத்தடுத்து துயர சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன"
இவ்வாறு சிபிஐ குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.