பைக் டாக்சி ஓட்டுநரின் எல்லை மீறிய செயல் - பெண்ணின் துணிச்சலான நடவடிக்கை!
தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலம் அருகே, பைக் டாக்சி ஓட்டுநர் ஒருவர் பெண் பயணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புரசைவாக்கம் பகுதியில் வசிக்கும் 24 வயது இளம்பெண் ஒருவர், கடந்த ஜூலை 4-ஆம் தேதி முதல் வழக்கமாகப் பைக் டாக்சி மூலம் தேனாம்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்திற்குச் சென்று வந்துள்ளார். அந்த பைக் டாக்சி ஓட்டுநரான சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் (45), தினமும் தானே அந்தப் பெண்ணை அழைத்துச் செல்வதாகக் கூறி வந்துள்ளார். அந்தப் பெண்ணும் இதற்குச் சம்மதித்து, தினமும் அவருடன் பயணம் செய்துள்ளார்.
வழக்கம் போல், இன்று காலை அந்தப் பெண் புரசைவாக்கத்திலிருந்து தேனாம்பேட்டைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, அண்ணா மேம்பாலம் அருகே பைக் டாக்சி ஓட்டுநர் சதீஸ்குமார், அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், கோபத்துடன் உடனடியாக பைக்கை நிறுத்தச் சொல்லி இறங்கிவிட்டார்.
உடனே அந்தப் பெண் 100 என்ற அவசர உதவி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேனாம்பேட்டை போலீஸார், அந்தப் பெண்ணின் புகாரைப் பெற்று, உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் புதிய சட்டங்களான பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட சதீஸ்குமாரைக் கைது செய்த போலீஸார், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட சதீஸ்குமார், விசாரணைக்குப் பின்னர் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.