டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்த நபர்... இறங்கச் சொன்ன டிக்கெட் பரிசோதகருக்கு நேர்ந்த பரிதாபம்!
நடிகரும், ரயில் டிக்கெட் பரிசோதகருமான கே.வினோத்தை வடமாநிலத் தொழிலாளி ஒருவர், ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சினிமாவில் புலிமுருகன் உள்பட 15க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்து கவனம் பெற்றவர் கே.வினோத். இவர், ரயில் டிக்கெட் பரிசோதகராகவும் பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் (ஏப்.2) இரவு பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் எர்ணாகுளத்திலிருந்து ஈரோடு வரை டிக்கெட் பரிசோதிக்கும் பணியில் இருந்துள்ளார்.
ரயில் திருச்சூர் தாண்டியதும் டிக்கெட் இல்லாமல் பயணித்த வடமாநிலத் தொழிலாளிகளிடம் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கச் சொன்னதுடன் ரூ.1000 அபராதம் விதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதற்கிடையே, வடமாநிலத் தொழிலாளி ஒருவருக்கும் வினோத்தும் வாக்குவாதம் அதிகரித்துள்ளது. அந்த நேரத்தில், கதவருகே நின்றிருந்த வினோத்தை அத்தொழிலாளி ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மற்றொரு இருப்புப்பாதையில் வந்துகொண்டிருந்த ரயிலில் உடல்நசுங்கி வினோத் இறந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள், காவல்துறைக்கு தகவலைச் சொல்ல நடிகர் வினோத்தைத் தள்ளிவிட்ட வடமாநிலத் தொழிலாளி பாலக்காட்டில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அந்த தொழிலாளியிடன் நடத்தப்பட்ட விசாரணையில், ஓரிஸாவைச் சேர்ந்த அத்தொழிலாளியின் பெயர் ரஜினிகாந்த் என்றும் சம்பவத்தன்று அவர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
நடிகர் கே.வினோத் சினிமாவின் மீதான ஆசையில் டிக்கெட் பரிசோதகர் பணியை சேர்த்து, அவர் நடித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.