ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் மாற்று கட்சி அமமுக என தமிழ்நாடு மக்கள் நினைக்கின்றனர் - டிடிவி தினகரன் பேச்சு!
ஆண்ட கட்சிக்கும், ஆளுகின்ற கட்சிக்கும் ஒரே மாற்று கட்சி அமமுக தான் என்று தமிழக மக்கள் நினைத்து வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை திலகர் திடலில் திமுக அரசை கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய டிடிவி தினகரன் கூறியதாவது,
“நான் அரசியலுக்கு வருவேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. நான் எதையும் நினைத்து பார்த்து அரசியலுக்கு வரவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார். திமுக திருந்தி இருக்கும் என்று நம்பி மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திமுக அரசு நெல்லுக்கு ஆதார விலை 2100, கரும்புக்கு 4000 அறிவித்து விட்டு செய்யவில்லை.
இந்தப் பாராளுமன்ற தேர்தலில் அமமுக எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அதே போல் அமமுக கூட்டணி எங்கு போட்டியிட்டாலும் அங்கு நாம் தான் வெற்றி பெற்றோம் என்று வரவேண்டும். தேர்தல் வாக்குறுதி என்று எப்படி திமுக ஏமாற்றியதோ, அதேபோல் தேர்தல் கருத்துக்கணிப்பு என்று ஏமாற்றி வருகிறார்கள். வரும் திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் நான் கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிடுகிறேன், அதுபோல் தான் நடக்கும் என்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள்.
இந்த கூட்டத்திற்கு இயற்கையாக தொண்டர்களும், நிர்வாகிகளும் தானாக வந்தார்கள். எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. இந்த படை வெற்றி பெற்றே தேரும். ஆ.ராசா படித்தவர், அமைச்சராக இருந்தவர். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரை பற்றி பொய்யாக பேசுகிறார்” இவ்வாறு தெரிவித்தார்.