அரசின் முடிவால் ஜம்மு, காஷ்மீர் மக்கள் வளர்ச்சியை கண்டு வருகின்றனர் - மத்திய அமைச்சர் அமித்ஷா!
சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் விளைவாக வன்முறையை மட்டுமே சந்தித்து வந்த ஜம்மு காஷ்மீர் மக்கள் தற்போது வளர்ச்சியைக் கண்டு வருகின்றனர், மோடி அரசின் முடிவு சரியானது என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நிரூபித்துள்ளது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. அந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் நடத்தப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதில், சட்டப்பிரிவு 370-ஐ குடியரசுத் தலைவர் நீக்கியது செல்லும் என்றும் லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்ததை அங்கீகரிப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் தங்களின் ஆதரவையும், அதிருப்தியையும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அவரது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
“370-வது சட்டப்பிரிவை நீக்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அரசமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்யும் முக்கியமான முடிவை எடுத்தார். அன்று முதல் ஜம்மு-காஷ்மீரில் அமைதி மற்றும் இயல்புநிலை திரும்பியுள்ளது. வன்முறையை மட்டுமே சந்தித்து வந்த பள்ளத்தாக்கு மக்கள் தற்போது வளர்ச்சியைக் கண்டு வருகின்றனர். சுற்றுலா மற்றும் வேளாண் துறையின் வளர்ச்சி ஜம்மு-காஷ்மீர் மக்களின் வருமானத்தை அதிகரித்துள்ளது.
370-வது சட்டப்பிரிவை நீக்குவதற்கான திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது ஏராளமான உறுப்பினர்கள் இந்தியா அளித்துள்ள வாக்குறுதியை மீறக்கூடாது என்று கூறினார்கள். ஆனால் அந்த சட்டப்பிரிவால் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி யாரும் கவலைப்படவில்லை. இந்த சட்டப் பிரிவு தான் பெண்களுக்கு எதிரான, தலித் மக்களுக்கு எதிரான மற்றும் வளர்ச்சிக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு வேர் ஆகும். இந்த 370-வது சட்டப்பிரிவை நீக்கிய மோடி அரசின் முடிவு சரியானது என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நிரூபித்துள்ளது” என்று அமித்ஷா பதிவிட்டுள்ளார்.