For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!

06:45 AM Jul 22, 2024 IST | Web Editor
இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்
Advertisement

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ளது. நிகழ் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். 

Advertisement

மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்தது. இந்த கூட்டத் தொடரில் மக்களவையின் புதிய உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

2024 – 2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக நடைபெறும் அல்வா தயாரித்து விநியோகிக்கும் நிகழ்ச்சி ஜூலை 16 அன்று நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் இறுதியானதும் அல்வா கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் அதிகாரிகளும் ஊழியா்களும் அறைக்குள் பூட்டப்படும் ‘லாக்-இன்’ நடைமுறை தொடங்குவதற்கு முன் அல்வா நிகழ்வு நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர், உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். வழக்கமான முறையில் பூஜை சடங்குகளையொட்டி தயாரிக்கப்பட்ட அல்வாவை அதிகாரிகளுக்கும் ஊழியா்களுக்கும் நிதியமைச்சா் வழங்கினாா்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்தக் கூட்டம் நேற்று  காலை 11 மணிக்கு நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் பிரதான கமிட்டி அறையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய், நீட் விவகாரங்கள் மற்றும் துணை சபாநாயகர் பதவி குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறை போன்ற மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதாகக் அவர் குற்றச்சாட்டு சாட்டினார். அதேபோல உத்தரபிரதேசத்தில் கன்வார் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவு கடைகளில் பெயர் பலகைகள் குறித்து சமாஜ்வாதி கட்சி எம்பி ராம் கோபால் யாதவ் கேள்வி எழுப்பினார்.

இதனை அடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறுகிறது.  இதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளதால், மத்திய பட்ஜெட்டில் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

Tags :
Advertisement