"எதிர்க்கட்சித் தலைவர் பத்திரிகையில் பெயர் வர வேண்டும் என எதாவது கூறிக் கொண்டிருப்பார்!" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
மகளிர் உரிமைத் தொகை பற்றி எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அதற்கு பதில் அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பெயர் பத்திரிகையில் வர வேண்டும் என எதாவது கூறிக்கொண்டிருப்பார் எனக் கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.10.2024) சென்னை, அண்ணா அறிவாலயம் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்கள் பின்வருமாறு:
கேள்வி : மதுரையில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது. அரசின் நடவடிக்கை என்ன?
முதலமைச்சர் பதில்: தொடர்ந்து பெய்யவில்லை. நேற்றுதான் மழை பெய்திருக்கிறது. இரவோடு இரவாக தண்ணீரை எல்லாம் எடுத்தாகிவிட்டது. மாவட்டத்தின் 2 அமைச்சர்களும் முகாமிட்டு பணி மேற்கொண்டு வருகிறார்கள். 8 இடங்களில் தான் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. வேறு ஒன்றும் பிரச்சனையில்லை. இன்றைக்கு மழை வரும் என்று வானிலை மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பு செய்திருக்கிறது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கிறது. சென்னையிலிருந்து பொறுப்பு அதிகாரிகளை அனுப்பி வைத்திருக்கிறோம். அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். நிவாரணப் பணிகளும் அங்கு நடந்து கொண்டிருக்கிறது.
கேள்வி : வானிலை மையம் வேறு ஏதாவது மாவட்டத்தில் மழை பெய்யும் என்று சொல்லியிருக்கிறார்களா? கோயம்புத்தூரிலும் பெய்து கொண்டிருக்கிறது.
முதலமைச்சர் பதில்: அப்படி ஒன்றும் இல்லை. தென் மாவட்டங்களில் தான் மழை பெய்து கொண்டிருக்கிறது.
கேள்வி : சென்னையில் மழை பெய்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் போன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை போன்ற மாவட்டங்களுக்கு இதுபோன்ற திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா?
முதலமைச்சர் பதில்: அனைத்து ஊர்களிலும் மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது மழை வருவதை வைத்து அதற்கேற்றார்போல் நாங்கள் முடிவெடுப்போம்.
கேள்வி : மகளிர் உரிமைத் தொகையை தற்போதைய அரசு கடன் வாங்கித் தான் ஒவ்வொரு மாதமும் வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அதுபற்றி….
முதலமைச்சர் பதில்: அவர் சொல்லிக்கொண்டு இருப்பார். அவருக்கு வேறு வேலையே கிடையாது. அவர் பெயர் பத்திரிகையில் வரவேண்டும். அவர் முகம் அடிக்கடி டி.வி-யில் வரவேண்டும் என்பதற்காக சொல்லிக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை.
கேள்வி : மத்திய அமைச்சருடன் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இன்றைக்கு ஆய்வு நடந்திருக்கிறது. அதுபற்றி…..
முதலமைச்சர் பதில்: ஆமாம், ஏற்கனவே மத்திய அரசு அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்து நிதி ஒதுக்கி அறிவித்திருக்கிறார்கள். அதனால் அந்த நிதியை விரைவில் வழங்கவேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் இன்று நாங்கள் சொல்லியிருக்கிறோம்.