For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொடர் புகார்களுக்கு ஆளான தேசிய தேர்வு முகமையின் செயல்பாடு! தலைவர் பதவி வகித்த சுபோத் குமார் சிங் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

10:00 PM Jun 22, 2024 IST | Web Editor
தொடர் புகார்களுக்கு ஆளான தேசிய தேர்வு முகமையின் செயல்பாடு  தலைவர் பதவி வகித்த சுபோத் குமார் சிங் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
Advertisement

தொடர் புகார்களுக்கு ஆளான தேசிய தேர்வு முகமையின் தலைவர் சுபோத் குமார் சிங்கை கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சமீபத்தில் நடைபெற்ற முடிந்த நீட் தேர்வுகளில் ஏராளமான முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் 6 பேர் ஒரே மதிப்பெண் எடுத்திருப்பது மற்றும் மாணவர்களுக்கு வெவ்வேறு வினாத் தாள்கள் வழங்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேசிய தேர்வு முகமை இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ள நிலையில், அடுத்த அதிர்ச்சியாக யுஜிசி நெட் தேர்வுகளில் முறைகேடுகள் ஏற்பட்டதால் அந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் அரசியல்ரீதியாக மிகப்பெரிய பரபரப்பை இந்த விவகாரம் ஏற்படுத்தி உள்ளது. இ ந்த நிலையில் நாடு முழுவதும் நடைபெறும் பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க புதிய சட்டம் ஒன்றை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பொதுத்தேர்வுகளின் நேர்மையற்ற வழிமுறைகளை தடுத்தல் சட்டம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்கீழ் பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளில் மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும். நாடு முழுவதும் தற்போது பொதுத் தேர்வுகளில் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், அதிரடியாக இந்த சட்டத்தை நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தேசிய தேர்வு நடைமுறைகளில் நிலவும் பிரச்னைகளை சரிசெய்ய மத்திய கல்வி அமைச்சகம் உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழு 2 மாதங்களுக்குள் தனது அறிக்கையை மத்திய அமைச்சகத்திடம் சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன்,  எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் ரன்தீப் குல்ரியா,  சென்னை ஐஐடி பேராசிரியர் ராமமூர்த்தி உள்ளிட்ட 7 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

தேர்வுகள் வெளிப்படையாக, சுமூகமாக மற்றும் நியாயமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

இந்நிலையில், தேசிய தேர்வு முகமை தலைவர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். இதன்படி, என்.டி.ஏ தலைவராக இருந்த சுபோத் குமார் சிங் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு தலைவர் பிரதீப் சிங் கரோலா என்.டி.ஏ தலைவராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement