”இந்தியா கூட்டணி பின்பற்றும் ஒரே அரசியலமைப்பு ஊழல் மட்டுமே”- அண்ணமலை விமர்சனம்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இன்று முக்கியமான 3 மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் ஒன்று 130 ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதா ஆகும். இந்த மசோதாபடி பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் போன்ற ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக 30 நாள்கள் சிறை வைக்கப்பட்டால், 31 ஆவது நாளில் அவர்கள் தன்னிச்சையாகவே பதவிநீக்கம் செய்யப்படுவர் என்ற சட்ட வடிவை வழங்குகிறது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே இந்த பதவி நீக்க மசோதாவுக்கு தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மசோதாவை கருப்பு மசோதா என்றும் விமர்சித்தார். இந்த நிலையில் முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்களை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
”பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு அமைச்சரை இலாகா இல்லாத அமைச்சராக தக்க வைத்துக் கொண்டது இதை விட மோசமானது எதுவுமில்லை.
செந்தில் பாலாஜி சிறையில் இருந்து விடுதலையான பிறகு அவர் முன்பு வகித்த அதே இலாகாவில் மீண்டும் பணிமர்த்தப்பட்டார். பின்னர் உச்ச நீதிமன்றத்தின் கடும் விமர்சனத்தைத் தொடர்ந்து அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.
மற்றொரு இந்தியா கூட்டணியின் ஊழல் போராளியான அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட போதிலும் பல மாதங்கள் முதலமைச்சர் பதவியில் நீடித்தார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8 (4) ஐ உச்ச நீதிமன்றம் ரத்து செய்தபோது, அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம், அவசரமாக, தண்டனை விதிக்கப்படவிருந்த தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களைப் பாதுகாக்க ஒரு அவசரச் சட்டத்தை இயற்றியது. கூட்டணியின் பெயர் இன்று மாறிவிட்டது, ஆனால் அதன் குறிக்கோள் அப்படியே உள்ளது.
130வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஆச்சரியமல்ல; உங்கள் கூட்டணி உண்மையிலேயே பின்பற்றும் ஒரே அரசியலமைப்பு ஊழல் மட்டுமே”
என்று தெரிவித்துள்ளார்.