நடப்பு ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு!
2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 59 லீக் போட்டிகள் முடிவடைந்து உள்ள நிலையில், சென்னை, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பினை இழந்துள்ளன. இன்னும் 12 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஆஃப் சுற்று போட்டிகள் மட்டுமே நடத்தப்பட வேண்டியதாக உள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைப்பதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையே தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை பத்திரமாக திருப்பி அனுப்ப பிசிசிஐ வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் வீரர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு ஐபிஎல் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. நேற்றிரவு (மே.8) தர்மசாலாவில் நடைபெற்ற 58-ஆவது போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். கிரிக்கெட் வீரர்கள், தொழில்நுட்ப குழிவினர்கள் பாதுகாப்பாக விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் டெல்லிக்கு பாதுகாப்பாக அழைத்துவர பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் தொடருமா அல்லது இந்தியாவிலேயே நடைபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.