For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” - தலைமைச் செயலக சங்கத்தினர் கண்டன அறிக்கை!

2021 தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட கோரி தலைமைச் செயலகச் சங்கத்தினர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
10:17 PM Feb 05, 2025 IST | Web Editor
“பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்”    தலைமைச் செயலக சங்கத்தினர் கண்டன அறிக்கை
Advertisement

2021 தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு மாற்றாக புதிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரை அளிக்க அதிகாரிகள் குழு அமைத்ததற்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இது தொடர்பாக அச்சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “2021 தேர்தல் வாக்குறுதியான பழைய ஒய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதை விட்டுவிட்டு பழைய ஒய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஒய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திடவும் மாநில அரசின் நிதி நிலைமையையும் பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு புதிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரைப்பதற்காக அதிகாரிகள் குழு அமைத்ததற்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கடும் கண்டனத்தினை தெரிவித்துக் கொள்கிறது.

கடந்த 11.01.2025 அன்று  நிதியமைச்சர் சட்டமன்றத்தில் தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படாது என்கிற தொணியில் 2025 ஆம் ஆண்டு தமிழர் திருநாள்-பொங்கல் பரிசாக ஒரு அறிவிக்கை வெளியிட்டார். இது  முதலமைச்சரின் அறிவிப்பு இல்லை என்றாலும், நிதியமைச்சர் சட்டப்பேரவையிலேயே அறிவித்துள்ளதால், இது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவாகத் தான் எடுத்துக் கொள்ள முடியும் என தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் தெரிவித்திருந்தது. இப்போது அதிகாரிகள் குழு அமைத்து பத்திரிக்கைச் செய்தி வெளியிட்டுள்ளது என்பது அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் முதலமைச்சரின் கனிவான கவனத்திற்கு பின்வருவனவற்றைக் கொண்டு வருகிறது:-

1. தற்போது அமைத்துள்ள அதிகாரிகள் குழு என்பது 2021 சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் என்ற வாக்குறுதிக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது.

2. ஆளுகின்ற அரசின் 2021-2026ன் நான்கு ஆண்டுகள் நிறைவுறும் தருவாயில், ஐந்தாவதும் இறுதியுமான 2025-2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலுக்கு முன்னர் அதிகாரிகள் குழு அமைத்தது என்பது என்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.

3. குழு என்றாலே ஒரு விஷயத்தினை நடைமுறைப்படுத்தாமல் காலம் கடத்துவதுதான் என்பது அனைவரும் அறிந்ததுதான். அதுவும் அதிகாரிகள் குழுவிற்கு ஒன்பது மாத கால அவகாசம் வழங்கியிருப்பது என்பது, எந்த வகையிலும் பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படாது என்பதைத்தான் தெளிவாக உணர்த்துகிறது.

4. இதில் மேலும், அரசு ஊழியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தினை தந்தது என்பது அரசின் செய்தி வெளியீட்டில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஒய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட எனத் தெரிவித்துவிட்டு, புதிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரைப்பது என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாகும்.

5. மீண்டும் மீண்டும் அதிகாரிகள் குழு அமைப்பது என்பது  முதலமைச்சரின் மீதான நம்பகத்தன்மையினை முற்றாக அழித்துவிட்டது.

6. "உங்களது கோரிக்கைகளை மறக்கல, மறுக்கல, மறைக்கல" என்று கூறிய முதலமைச்சர், கோரிக்கைகளை மறக்கல என்பதை நாங்களும் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் கோரிக்கைகளை மறக்காமலும்-மறுக்காமலும் நிறைவேற்றாமலும் மறைத்து விட்டு, அந்தக் கோரிக்கைக்கே மறுவடிவம் கொடுத்து தற்போது அதிகாரிகள் குழு அமைத்துள்ளது என்பது, முதலமைச்சர் சொன்ன "மறைக்கல" என்பதன் உள்அர்த்தத்தினை புரிய வைக்கிறது.

7. எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது 2017 முதல் 2021 வரை நாங்கள் நடத்திய போராட்டங்களில் எல்லாம் எங்களின் ஒருவராகக் கலந்து கொண்டு விட்டு, எங்களது உரிமைகளுக்காக தாங்களும் குரல் கொடுத்து, கழக ஆட்சி மலர்ந்ததும் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று தாங்கள் சொன்னதை யாரும் மறக்கல. போராட்ட களத்திலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அளித்த வாக்குறுதிகளை நாங்களும் மறுக்கல. ஆனால், தற்போது மறைமுகமாக வந்துள்ள இந்த அறிவிப்பு "நீங்கள் சொன்ன மறைக்கல" என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

8. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்வதற்காக  சாந்தா ஷீலா நாயர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, பின்னர்  ஸ்ரீதர் தலைமையேற்று தயாரித்த அறிக்கையானது, மிகப் பெரிய போராட்டம் நடத்தி, அந்த போராட்ட வழக்கானது நீதிமன்றம் வரை சென்ற பின்னரே, தமிழ்நாடு அரசிடம் அளிக்கப்பட்டது. திமுக அரசு நான்கு ஆண்டுகளாக அந்த அறிக்கையினை வெளியிடாமல் உள்ளபோது, பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்த மேலும் ஒரு குழு அமைப்பது எதற்கு?

9. மேலும் அமைக்கப்பட்டுள்ள அலுவலர்கள் குழுவில் அதனால் பயன்பெறக் கூடிய அல்லது பாதிப்பு அடையக் கூடிய அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் தரப்பிலிருந்து ஒருவரைக் கூட நியமிக்காமல் இருக்கும்போதே கண்டிப்பாக இந்தக் குழு எங்களுக்கு எதிரான பரிந்துரைகளை வழங்கும் என்பதில் எங்களுக்கு சந்தேகமில்லை.

10. தமிழ்நாட்டிலே இதுநாள்வரை அமைக்கப்பட்ட எந்தவொரு குழுவின் அறிக்கையும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் வழங்கப்பட்டதில்லை. அந்த வகையில், இந்த குழுவும் கண்டிப்பாக கால நீட்டிப்பு கோரி காலத்தை கடத்தும் என்பதுதான் திண்ணம்.

11. ஒன்பது மாதங்களுக்குள் அறிக்கை அளித்தாலும் அதனை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் தற்போதைய அரசிற்கு இல்லை. 2026 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியில் அமரப்போகும் அரசால் மட்டுமே இந்த பரிந்துரைகளைச் செயல்படுத்துவது குறித்து முடிவு எடுக்க முடியும்.

12. பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துவதற்கு குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. கொள்கை முடிவினை எடுத்தாலே போதும்.

13. 2024 பாராளுமன்றத் தேர்தலின்போது, தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக முதலமைச்சர், பாஜக அரசு குறித்து, அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் பொன்வரிகளான "பலரை சில காலமும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது" என்பதைக் குறிப்பிட்டிருந்தார். முதலமைச்சர் 2024 பாராளுமன்றத் தேர்தலின்போது சுட்டிக்காட்டிய ஆபிரகாம் லிங்கனின் பொன்மொழியினை ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் “மறக்கல, மறுக்கல”.

முதலமைச்சர் அமைத்துள்ள அலுவலர்கள் குழுவினை உடனடியாகக் களைத்துவிட்டு இனியும் காலம் தாழ்த்தாது, தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பினை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கேட்டுக் கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement