For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த முதியவர் - சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!

07:47 AM Feb 21, 2024 IST | Web Editor
உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த முதியவர்   சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்
Advertisement

சென்னையில், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய முதியவரை, மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் அவர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் மீனவ குப்பத்தை சேர்ந்த 70 வயதான சடையாண்டி என்பவர், சுமார் மாலை 4 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்ட நிலையில் சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார்.

இதனைத்தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் அவரை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவசர சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அவரது தலையில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறியதால் உடனடி மேல் சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சமயத்தில் அவசர சிகிச்சை மையத்தில் இருந்த ஆம்புலன்ஸ் ஒன்று வேறொரு நோயாளியை ஏற்றி சென்றது.

இதனால் அவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டனர். பெரும்பாக்கத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரம் உள்ள ஈஞ்சம்பக்கத்திற்கு ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், உயிருக்கு போராடிய முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட குப்பத்து பெண்கள் மற்றும் மீனவர்கள், ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் ஒருவர் இறந்ததாக கூறி நியாயம் கேட்டு ஈசிஆர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் ஈசிஆர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

Tags :
Advertisement