சென்னையில் வீட்டு உரிமையாளரின் வாகனங்களுக்கு தீ வைத்த முதியவர்!
சென்னையில் டிபி சத்திரத்தில் தனது வீட்டு உரிமையாளரின் இரு சக்கர வாகனங்களுக்கு முதியவர் ஒருவர் தீ வைத்ததில் 4 வாகனங்கள் கருகின.
சென்னை கீழ்பாக்கத்தை அடுத்த டிபி சத்திரம் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். அவர் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. இதில் 4 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின. வினோத்தின் வீட்டில் குடியிருந்த 60 வயது முதியவர் நடராஜன் என்பவர் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளார் என்பது சிசிடிவி காட்சிகள் பார்த்து உறுதி செய்யப்பட்டது.
வீட்டு உரிமையாளர் வினோத்துடன் நடராஜனுக்கு பிரச்னை ஏற்பட்டது. இதனால் அவர் நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்துள்ளார். புகாரின் பேரில் டிபி சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று காலை தலைமறைவாக இருந்த நடராஜனை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அந்த முதியவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.