புதிதாக வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கை சரிவு!
புதிதாக வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கை கடந்த ஒராண்டில் 10 லட்சத்திற்கும் அதிகமாக குறைதிருப்பதாக EPFO தரவுகளின்படி தெரியவந்துள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தரவுகளின் படி ஜனவரி முதல் அக்டோபர் வரை புதிதாக வேலை வாய்ப்பு பெற்றோர் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் அக்டோபர் வரை மொத்தம் 90.6 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டன. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 1.01 கோடியாக இருந்தது. 18-28 வயதுக்குட்பட்ட புதிய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 67.1 லட்சத்தில் இருந்து 59.7 லட்சமாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 11% குறைவு ஆகும்.
2022 - ல் புதிதாக வேலைவாய்ப்பு பெற்றோர் விவரம்:
- புதிதாக வேலைவாய்ப்பு பெற்றோர் - 1,01,17,252
- புதிதாக வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்கள் - 67,19,990
- புதிதாக வேலைவாய்ப்பு பெற்ற பெண்கள் - 26,83,777
2023 - ல் புதிதாக வேலைவாய்ப்பு பெற்றோர் விவரம்:
- புதிதாக வேலைவாய்ப்பு பெற்றோர் - 90,62,500
- புதிதாக வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்கள் - 59,79,743
- புதிதாக வேலைவாய்ப்பு பெற்ற பெண்கள் - 23,55,089
தொழில்நுட்பம் மற்றும் அறிவு சார்ந்த சேவைத் துறையில் தேவை குறைந்துள்ளதாலும், வருவாய் குறைந்து வருவதாலும், இந்தத் துறையில் உள்ள நிறுவனங்கள் இப்போது புதிய ஆட்சேர்ப்புகளைக் குறைத்து வருவதாக அந்த துறை சார்ந்த வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். வேலைவாய்ப்பு குறைவதற்கு இதுவே முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது.
பெண்களை பொறுத்தவரை, 2023 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் அக்டோபர் வரை மொத்தம் 23.5 லட்சம் பெண்களுக்கு வேலை கிடைத்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 26.8 லட்சமாக இருந்தது. அதாவது வேலை வாய்ப்பு பெற்றோரின் எண்ணிக்கை 12% குறைந்துள்ளது. பெண்களை பொறுத்தவரை வீட்டிலிருந்து வேலை செய்வதையே அதிகம் விரும்புவதாகவும், அலுவலகம் வந்து வேலை செய்ய விருப்பாததால் பலர் வேலைக்கு திரும்பவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மொத்தமாக பார்க்கும் போது புதிதாக வேலைக்கு அமர்வோர் எண்ணிக்கையில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கையே கணிசமாக குறைந்திருப்பதும் தரவுகளின் வாயிலாக தெரியவந்துள்ளது.
தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதற்காக 9 வளர்ந்த நாடுகளுடன் இந்தியா 17 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இன்னும் நான்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நேரத்தில், வெளிநாட்டில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இந்திய தொழிலாளர்களுக்கு ஒரு வாய்ப்பாக உள்ளது. இவர்களின் பயிற்சிக்காக நாடு முழுவதும் 30 பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு கட்டுமானம், உற்பத்தி மற்றும் விவசாயம் ஆகிய துறைகள் சார்ந்து பயிற்சி அளிக்கப்படும். ஏப்ரல் 2022 முதல் டிசம்பர் 2023 வரை, பயிற்சி பெற்ற 25 ஆயிரம் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.