"மகாராஷ்டிரத்தில் புதிய ஆட்சி சுமுகமாக அமையும்" - முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிரத்தில் புதிய ஆட்சி மிகவும் சுமுகமாக அமையும் என்று முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 20ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா தேசியவாத காங்கிரஸ் இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களமிறங்கின. இதனைத் தொடர்ந்து, நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்த தேர்தலில் பாஜக தலைமையில் ஆன கூட்டணி மொத்தம் 230 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. அதன் பிறகு காங்கிரஸ் கூட்டணி குறைந்த அளவிலான தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள் : தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு!
தேர்தல் வெற்றிக்குப் பிறகு, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே , துணை முதலமைச்சர்களான பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ், தேசியவாத காங்கிரஸின் அஜீத் பவார் ஆகியோர் மும்பையில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது :
" ஒரு தரப்பினரை திருப்திபடுத்தும் அரசியலை மகாராஷ்டிர மக்கள் நிராகரித்துவிட்டனர். ‘ஒற்றுமையாக இருப்போம், பாதுகாப்பாக இருப்போம்’ என்ற பிரதமர் நரேந்திர மோடியின் ஒற்றுமை அழைப்புக்கு மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், உண்மையான சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் எது என்பதையும் தோ்தல் முடிவு வெளிப்படுத்தியுள்ளன. பாஜக, சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் சாா்பில் வெற்றி பெற்ற அனைத்து எம்எல்ஏக்களும் மும்பை வரவுள்ளனர். அவா்கள் பேரவையில் தங்கள் கட்சித் தலைவர் யார்? என்பதைத் தேர்வு செய்வார்கள். எங்கள் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மிகவும் இணக்கமாக முடிந்தது. அதேபோல மகாராஷ்டிரத்தில் புதிய ஆட்சி சுமுகமாக அமையும். அதில் எந்த ஒளிவுமறைவும் இருக்காது"
இவ்வாறு மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.