ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் என்ற பெயர்கள் நாட்டின் வரலாறுகள் - பிரதமர் மோடி!
ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா, கடந்த புதன்கிழமை தொடங்கியது. இந்த விழாவின் நிறைவு நாளான இன்று பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பெருவுடையாரை தரிசனம் செய்த பிரதமர் மோடி, புகைப்பட கண்காட்சியையும் பாா்வையிட்டார்.
பின்னர் தொடங்கிய விழாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து மாமன்னா் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.பின்னர் விழாவில் பேசிய மோடி ‘வணக்கம் சோழ மண்டலம்’ என்று கூறி தனது உரையைத் தொடங்கினார். மேலும் அவர், “நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” என்று தமிழில் சிவனைப் போற்றினார்.
தொடர்ந்து அவர், ”ராஜராஜ சோழனின் மண்ணில் இளையராஜாவின் பாடல் சிவ பக்திமயமாக இருந்தது.என் விருப்பமெல்லாம் சிவனின் நல்லாசிகள் 140 கோடி மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தான்.சோழர்கள் குறித்து கண்காட்சியை கண்டு பிரமித்து போனேன். பிரதமர் மோடி ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் என்ற பெயர்கள் நாட்டின் வரலாறுகள். சோழ சாம்ராஜ்யம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று. சோழ அரசர்களின் அரசியல், வணிக தொடர்பு மாலத்தீவு தொடங்கி கிழக்கு ஆசிய நாடுகள் வரை பரவி இருந்தது. ராஜராஜன், ராஜேந்திர சோழ இரு பெயர்களும் நாட்டின் அடையாளங்கள். பிரிட்டனுக்கு முன்பாகவே சோழர்கள் குடவோலை முறையில் ஆட்சி செய்தனர். தங்கம், வெள்ளி அல்லது கால்நடைகளை மற்ற நாடுகளிலிருந்து கொண்டு வந்த பல மன்னர்களைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம். ஆனால் ராஜேந்திர சோழன் கங்கை நதிநீரை கொண்டு வந்தார். அன்பே சிவம் என்றார் திருமூலர்.
உலகம் தற்போது நிலையில்லா தன்மை, வன்முறை, சுற்றுச்சூழல் எனப் பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தீர்வளிக்கும பாதையாக சைவ சித்தாந்தம் இருக்கிறது. அதாவது "அன்பே சிவம்" என்ற கோட்பாட்டை உலகம் முழுவதும் கடைப்பிடித்தால் சங்கடங்களுக்கும் பிரச்னைகளுக்கும் இடமே இருக்காது. அன்பே சிவம் என்பது எவ்வளவு தொலைநோக்கான பார்வை கொண்டவை என்பதை அறிந்துகொள்ளலாம். திருமூலரின் வழியில்தான் இன்று இந்தியா பயணித்து வருகிறது . மேலும், களவாடப்பட்ட கலைச் சின்னங்களை மீட்டுள்ளோம்
ராஜராஜ சோழன் ஒரு சக்திவாய்ந்த கடற்படையை உருவாக்கினார். அதை ராஜேந்திர சோழன் மேலும் வலுப்படுத்தினார். சோழப் பேரரசு வளர்ந்த இந்தியாவிற்கான ஒரு பண்டைய வரைபடத்தைப் போன்றது. நீர் மேலாண்மையில் சோழர்கள் முன்னோடியாகத் திகழ்ந்தனர். இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் மொழி ஒலித்தது. தமிழர் கலாசாரத்தோடு இணைந்த செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. சைவ பாரம்பரியத்தில் தமிழகம் முக்கிய மையமாக திகழ சோழர்களே காரணம்.
ராஜராஜ சோழன் மற்றும் அவரது மைந்தன் ராஜேந்திர சோழன் இருவருக்கும் பிரம்மாண்ட சிலை தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன். இன்றைய இந்தியா தனது பாதுகாப்பை மிக முக்கியமானதாகக் கருதுகிறது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை யாராவது தாக்கினால், இந்தியா அதன் சொந்த மொழியில் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை ஆபரேஷன் சிந்தூரின் போது உலகம் கண்டது. இந்தியாவின் எதிரிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு உலகில் பாதுகாப்பான இடம் இல்லை என்பதை ஆபரேஷன் சிந்தூர் தெளிவுபடுத்தியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் ஒரு புதிய உத்வேகத்தைத் தூண்டியுள்ளது” இவ்வாறு அவர் பேசினார்.