உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய் யானை - பாசப்போராட்டம் நடத்தும் குட்டி யானை!
கோவை மருதமலை அடிவார சரகப் பகுதியில் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருக்கும் யானைக்கு வனத்துறை மருத்துவ குழுவினர் 2வது நாளாக சிகிச்சை அளித்து வரும் நிலையில், குட்டியானை நகராமல் தாயின் அருகிலேயே நின்று பாசப்போராட்டம் நடத்தி வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான யானைகள் வசித்து
வருகின்றன. அவ்வப்போது வனப்பகுதிக்குள் செல்லும் வனத்துறை ஊழியர்கள் யானைகள் மற்றும் வன உயிரினங்களின் நடமாட்டங்களை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை அடிவார சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது யானை பிளிரும் சத்தம் கேட்டதையடுத்து வனத்துறையினர் சென்று பார்த்தனர். அப்போது அப்பகுதியில் பெண் யானை ஒன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்திருப்பதையும், அதனுடன் குட்டி யானை ஒன்று இருப்பதையும் கண்ட வனத்துறையினர் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கும், கால்நடை
மருத்துவர்களுக்கும் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை மருத்துவ குழுவினர் யானைக்கு பழங்கள் கொடுத்து 2 வது நாளாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே குட்டியானை நகராமல் தாயின் அருகிலேயே நின்று பாசம் போராட்டம் நடத்தி வருகிறது. அவ்வப்போது குட்டி யானை உடல் நிலை சரியில்லாத தாய் யானையின் மீது ஏறி சுற்றி சுற்றி வருகிறது.