2024-ல் அதிக வியூஸ்களை அள்ளிய பாடல்கள்!
இந்த ஆண்டு யூடியூபில் அதிக வியூஸ்களை அள்ளிய தமிழ் பாடல்கள் குறித்து பார்க்கலாம்.
நாளையுடன் 2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. இந்த ஆண்டு பல முக்கிய நிகழ்வுகளை மக்கள் சந்தித்துள்ளனர். அரசியல், சினிமா , பொருளாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு ஏராளமாக நடந்துள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு யூடியூபில் அதிக வியூஸ்களை அள்ளிய பாடல்கள் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.
அரண்மனை 4 - அச்சச்சோ
சுந்தர் சி இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் அரண்மனை 4. அரண்மனை படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சுந்தர் சி அதன் அடுத்தடுத்த பாகங்களை எடுத்தார். அரண்மனை 4 படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இவர்களுடன் சுந்தர் சி -யும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற அச்சச்சோ பாடம் யூடியூபில் 28.3 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.
ராயன் - வாட்டர் பாக்கெட்
தனுஷே இயக்கி நடித்திருந்த திரைப்படம் ராயன். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனுடன் இப்படத்தில் இடம்பெற்றிருந்த வாட்டர் பாக்கெட் பாடலை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இப்பாடல் 15.1 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.
வேட்டையன் - மனசிலாயோ
ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் வேட்டையன். இப்படத்தில் ஃபகத் பாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியார், டாணா டகுபதி உள்ளிட்ட ரசிகர் பட்டாளமே நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள மனசிலாயோ பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது. மனசிலாயோ பாடல் யூடியூபில் 13.3 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் - கோல்டன் ஸ்பேரோ
பிரபல நடிகரும், இயக்குநருமான தனுஷ் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேலும், விஸ்வாசம் படம் மூலம் பிரபலமடைந்த அனிகா சுரேந்திரன், ப்ரியா வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள கோல்டன் ஸ்பேரோ பாடல் 10 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.
தங்கலான் - மினிக்கி மினிக்கி
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தங்கலான். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஞானவேல் ராஜா தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள மினிக்கி மினிக்கி பாடல் 9.1 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.
GOAT - விசில் போடு
வெட்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் கோட். இப்படத்தில் விஜய், காந்தி – ஜுவன் என இரண்டு வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார். இப்படத்தில் விஜயுடன், பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம், சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள விசில் போடு பாடல் 7.7 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.
GOAT - மட்ட
வெட்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் கோட். இப்படத்தில் மட்ட என்ற பாடலில் த்ரிஷா சிறப்பு நடனம் ஆடியிருந்தார். இப்பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மட்ட பாடல் யூடியூபில் 7.3 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.
பிரதர் - மக்காமிஷி
எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பிரதர்’. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன், பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், நடராஜன் சுப்பிரமணியம், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த மக்காமிஷி பாடல் 6.4 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.
அமரன் - ஹே மின்னலே
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் ‘அமரன்’. இப்படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய பெயர் பெற்றுத் தந்தது. சாய் பல்லவியின் நடிப்பும் பெரிதாக பேசப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் 'ஹே மின்னலே' பாடல் 5.3 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.