இத்தாலியில் உள்ள 3,300 அகதிகளை வெளியேற்ற வெளியுறவு அமைச்சகம் முடிவு!
ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதாரா நெருக்கடியால் ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வருகின்றனர். அவர்களில் பலர் லிபியா, துனிசியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களே பெரும்பான்மையானவர்கள்.
இதன் காரணமாக எல்லையோர பகுதியில் கடலோர போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் சட்ட விரோத குடியேற்றம் தொடர் கதையாகி வருகிறது.
இந்தநிலையில் சட்ட விரோதமாக குடியேறி உள்ள அகதிகளை அவர்களின் தாயகத்திற்கு திருப்பி அனுப்ப இத்தாலி அரசாங்கம் முடிவு செய்திருந்தது. இதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டதில் சுமார் 3 ஆயிரத்து 300 அகதிகள் சட்ட விரோதமாக குடியேறியுள்ளது தெரிய வந்துள்ளது. எனவே அவர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப சுமார் ரூ.187 கோடியை இத்தாலி வெளியுறவு அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில் இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டோனியோ தாஜானி தலைமையில் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான கூட்டுக் குழு கூடியது. துணை வெளியுறவு அமைச்சர் எட்மண்டோ சிரியெல்லி மற்றும் உள்துறை அமைச்சர் மேட்டியோ பியான்டெடோசி ஆகியோரும் அதில் கலந்து கொண்டனர்.
இந்த குழுவில் இத்தாலிய உள்துறை அமைச்சர் பங்கேற்று, இத்தாலிய அரசாங்கம் இந்த திட்டத்திற்கு அளிக்கும் முன்னுரிமையைக் காட்டியது இதுவே முதல் முறை என்று ஐ.நா.வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.