For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் கொலைக் களங்களாக மாறிவிட்டன!” - உச்சநீதிமன்றம் விமர்சனம்!

03:30 PM Aug 05, 2024 IST | Web Editor
“ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் கொலைக் களங்களாக மாறிவிட்டன ”    உச்சநீதிமன்றம் விமர்சனம்
Advertisement

டெல்லியில் 3 ஐஏஎஸ் பயிற்சி மைய மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தை சூ மோட்டோ வழக்காக விசாரிக்கும் உச்சநீதிமன்றம் “ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் கொலை களங்களாக மாறிவிட்டன!” என்று கூறியுள்ளது. 

Advertisement

டெல்லி ராஜேந்திரா நகர் பகுதியில் ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், டெல்லியில் கடந்த 27.07.2024-ஆம் தேதி மாலை பெய்த கனமழை காரணமாக இப்பயிற்சி மையத்தின் தரை தளத்தில் வெள்ளம் புகுந்தது. சுமார் 20 மாணவர்கள் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில் 17 பேர் மட்டுமே உரிய நேரத்தில் மீட்கப்பட்டனர். தெலங்கானாவை சேர்ந்த தன்யா சோனி, உ.பி.யைசேர்ந்த ஷ்ரேயா யாதவ், கேரளாவை சேர்ந்த நவீன் டால்வின் ஆகிய 3 பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உரிய நடவடிக்கை கோரி அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வழக்கில் பயிற்சி மைய உரிமையாளர் அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் உள்ளிட்ட 7 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் உயர் நிலை விசாரணை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு இடைக்கால தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வு முன் கடந்த 02.08.2024 அன்று விசாரணைக்கு வந்த போது, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சம்பவத்துக்கு காரணமான மற்றவர்கள் மீது இன்னும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நீபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டனர். அதோடு, சிபிஐ விசாரணையை கண்காணிக்க மூத்த அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், 3 ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் இன்று தாமாக முன்வந்து சூ மோட்டோ வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டதோடு, இவ்விவகாரம் குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், டெல்லி மாநில அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், "நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கனவுகளுடன் வந்த மாணவர்களின் வாழ்க்கையுடன் பயிற்சி மையங்கள் விளையாடுகின்றன" என்று நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் பெஞ்ச் கூறியது.

அதோடு, இந்த நிகழ்வு எச்சரிக்கை மணியை அடித்திருப்பதாகவும், பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காத நிறுவனங்களை செயல்பட அனுமதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியது. இந்த பயிற்சி மையங்கள் கொலை களங்களாக மாறிவிட்டன. நேரடி வகுப்புகள் நடத்த முறையான விதிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை மட்டும் நடத்திக்கொள்ளட்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Tags :
Advertisement