தந்தையின் உடலை 2 ஆண்டுகளாக அலமாரியில் மறைத்து வைத்த நபர்... போலீசில் சிக்கியது எப்படி? வெளியான அதிர்ச்சி பின்னணி!
ஜப்பானில் உள்ள டோக்கியோவைச் சேர்ந்தவர் நோபுஹிகோ சுசுகி (56). இவர் சீன உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த வாரமாக தனது உணவகத்தை திறக்காமல் இருந்தார். இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுசுகியின் வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது போலீசாருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அதாவது, சுசுகியின் வீட்டில் உள்ள அலமாறியில் எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. போலீசார் இதுகுறித்து சுசுகியிடம் விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் தான் வேலை முடிந்து திரும்பியபோது தனது 86 வயதான தந்தை வீட்டில் இறந்து கிடந்ததாக சுசுகி போலீசாரிடம் தெரிவித்தார். அவரது தந்தை எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை எனவும் அடக்கம் செய்யும் செலவுகளைத் தவிர்ப்பதற்காக தந்தையின் உடலை மறைத்து வைத்ததாகவும் அவர் கூறினார். இறுதிச் சடங்குகள் செய்வதற்கு அதிகளவு செலவாகும் என்று உடலை மறைத்ததற்கான காரணத்தை அவர் விளக்கினார்.
சுசுகி ஆரம்பத்தில் தனது செயல்களுக்காக குற்ற உணர்ச்சியுடன் இருந்ததாகவும், பின்னர், அவர் எல்லாப் பழியையும் தனது தந்தையின் மீது சுமத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர். தனது தந்தையின் ஓய்வூதிய பணத்தை மோசடி செய்ததாக குற்றம்சாட்டி போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன் ஜப்பானிய இணையவாசிகள் பலவிதமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தந்தையின் ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக அவரே தனது தந்தையைக் கொன்றதாக சிலர் ஊகித்தாலும், மற்றவர்கள் அவரது நிலைமையைக் கண்டு அனுதாபப்பட்டனர்.
"ஓய்வூதியத்திற்காக தனது தந்தையின் உடலை மறைத்து வைத்த ஒரு மோசமான மனிதர்" என்று ஒரு பயனர் கூறினார். "நண்பர் ஒருவர் இறந்தால் என்ன செய்வது என்று பலருக்குப் புரியவில்லை" என்று இன்னொருவர் பதிவிட்டார். ஜப்பானில் ஒரு இறுதிச் சடங்கிற்கு சுமார் 1.3 மில்லியன் யென் (9,000 அமெரிக்க டாலர்கள்) செலவாகும் என கூறப்படுகிறது.
ஜப்பானில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2023 ஆம் ஆண்டில், 56 வயதான வேலையில்லாத நபர் ஒருவர் தனது தாயின் உடலை மூன்று வருடங்கள் வீட்டிலேயே மறைத்து வைத்திருந்ததாகவும், அந்த நேரத்தில் அவரது ஓய்வூதியத்திலிருந்து கிட்டத்தட்ட 2 மில்லியன் யென்களை குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.