சூடுபிடிக்கும் #Maharashtra தேர்தல் களம்.. அஜித்பவாரை எதிர்த்து தம்பி மகன் போட்டி!
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் தேசியவாத காங்கிரசின் அஜித்பவாரை எதிர்த்து அவரது தம்பி மகன் யுகேந்திர பவார் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) சார்பில் களம் இறங்கியுள்ளார்.
மகாராஷ்டிராவில் வருகிற நவம்பர் 20ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்ல் நடைபெறுகிறது. தற்போது மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி (மகாயுதி) ஆட்சி நடக்கிறது. அம்மாநில முதலமைச்சராக சிவசேனாவின் ஏக்னாத் ஷிண்டே இருந்து வருகிறார். மறுபுறம் எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணி சிவசேனா, சரத்பவார் அணி தேசியவாத காங்கிரசின் மகா விகாஸ் கூட்டணி உள்ளது.
இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் ஆளும் கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சி கூட்டணி கட்சிகளும் மாறி மாறி வியூகம் வகுத்து வருகின்றன. இந்த நிலையில் பாஜக முதலில் தொகுதி பங்கீடை நிறைவு செய்தது மட்டுமின்றி வேட்பாளர்களையும் அறிவித்தது. மேலும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளுக்கு சரிசமமாக 85 தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 3 கட்சிகளும் தலா 85 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.
பாராமதி தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் அஜித்பவார் களம் காணும் நிலையில், அவரை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) சார்பில் அஜித் பவாரின் தம்பி மகன் யுகெந்திர பவார் போட்டியிடுகிறார். பாராமதி தொகுதியில் 8 முறை போட்டியிட்டு அஜித் பவார் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.