GTvsDC | சதம் விளாசிய கே.எல். ராகுல் - குஜராத்துக்கு 200 ரன்கள் இலக்கு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று(மே.18) சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் குஜராத் அணி வென்றால் முதல் அணியாக ப்ளே ஆஃப்-குள் நுழையும். டெல்லி அணி வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப் ரேஸில் நீடிக்கும் சூழல் ஏற்படும். அந்த வகையில் இன்றைய போட்டி டெல்லி அணிக்கு முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டியின் டாஸை வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து டெல்லி அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில் தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோர் களமிறங்கினர். இதில் டு பிளெசிஸ் வெறும் 5 ரன்களில் அர்ஷத் கானிடம் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து கே.எல். ராகுலுடன் அபிஷேக் போரெல் கை கோர்ந்து தனது பங்கிற்கு 30 ரன்கள் அடித்து சாய் கிஷோரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனிடையே ஒருபக்கம் கே.எல். ராகுல் நிதானமாகவும், தேவைக்கேற்ப ரன்களையும் குவித்து வந்தார்.
தொடர்ந்து அவருடன் அக்சர் படேல் கை கோர்த்து 25 ரன்கள் அடித்து அவுட்டானார். இறுதி வரை களத்தில் நின்ற கே. எல். ராகுல் 14 பவுண்டரி 4 சிக்ஸர்கள் விளாசி 112 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது. இதையடுத்து குஜராத் அணி 200 ரன்களை சேஸிங் செய்ய உள்ளது.