மத்திய அமைச்சரிடம் இருந்து இந்தியில் வந்த கடிதம்…. தமிழில் கைப்பட எழுதி பதில் அனுப்பிய திமுக எம்பி அப்துல்லா!
மத்திய அமைச்சரிடம் இருந்து இந்தியில் கடிதம் வந்த நிலையில் திமுக எம்பி அப்துல்லா அவருக்கு தமிழில் கைப்பட எழுதி பதில் அனுப்பியுள்ளார்.
ரயில்வே வழங்கும் உணவின் தரம் மற்றும் தூய்மை குறித்தும், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அங்கீகரிக்கப்படாத விற்பனையை நிறுத்துவது குறித்தும் மாநிலங்களவையில் திமுக எம்.பி அப்துல்லா பல்வேறு கேள்விகளை முன்வைத்து பேசியிருந்தார்.
இதற்கு ரயில்வே துறை இணை அமைச்சர் ரவ்நீத் சிங், கடிதம் வாயிலாக திமுக எம்.பி அப்துல்லாவிற்கு பதில் அளித்தார். ஆனால் அது இந்தி மொழியில் இருந்துள்ளது. இந்நிலையில், அவரது அலுவலக அதிகாரிகளை அழைத்து “எனக்கு இந்தி தெரியாததால் ஆங்கிலத்தில் கடிதத்தை அனுப்புங்கள்” என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அவர்கள் மீண்டும் இந்தியிலேயே கடிதம் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தை குறிப்பிட்டு ரயில்வே துறை இணை அமைச்சர் ரவ்நீத் சிங்கிற்கு அப்துல்லா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தாங்கள் எனக்கு அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். எனக்கு இந்தி மொழி தெரியாத காரணத்தால் அதில் என்ன எழுதியுள்ளீர்கள் என எனக்குத் தெரியவில்லை. எனவே அடுத்த முறை கடிதம் அனுப்பும் போது ஆங்கிலத்தில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதோடு. இந்த கடிதத்தையும், தனக்கு இந்தி மொழியில் வந்த கடிதத்தையும் தனது X தள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
அதில், ரயில்வே இணை அமைச்சர் அலுவலகத்தில் இருந்து எப்போதும் இந்தியில்தான் கடிதம் வருகிறது. அவரது அலுவலக அதிகாரிகளை அழைத்து “எனக்கு இந்தி தெரியாததால் ஆங்கிலத்தில் கடிதத்தை அனுப்புங்கள்” என்று சொல்லியும் மீண்டும் மீண்டும் இந்தியிலேயே கடிதம் வருகிறது. தற்போது அவருக்கு “புரியும்படி” பதில் அனுப்பி உள்ளேன். இனி புரிந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.