For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஒவ்வொரு ஆண்டின் இறுதி வாரம் குறள் வாரமாக கடைபிடிக்கப்படும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

12:12 PM Dec 31, 2024 IST | Web Editor
“ஒவ்வொரு ஆண்டின் இறுதி வாரம் குறள் வாரமாக கடைபிடிக்கப்படும்”   முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் பல புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

Advertisement

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.31) வெளியிட்டார். முதலமைச்சர் வெளியிட்ட இந்த வெள்ளி விழா மலரை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து திருவள்ளுவர் தோரணவாயிலுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், கன்னியாகுமரியில் உள்ள சாலைக்கு அய்யன் திருவள்ளுவர் சாலை என்று பெயர் சூட்டினார். அதனை தொடர்ந்து அவர், திருவள்ளுவர் பசுமை பூங்காவை திறந்து வைத்து திருவள்ளுவர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

“வான் புகழ் வள்ளுவருக்கு வான் உயர சிலை வைக்க வேண்டும் என்பது கருணாநிதியின் கனவு. அதை நினைவாக்கியதில் அவருக்கு மகிழ்ச்சி. கருணாநிதி வழியில் தமிழ்நாட்டிற்கும், தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் உழைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வாழ்நாள் கடைமை. சிலர் கேட்கின்றனர் சிலை வைத்ததற்கு எதற்கு விழா என்று?. திருவள்ளுவர் தமிழர்களின் அடையாளம். திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம்.

அதனால் கொண்டாடுகிறோம், கொண்டாடுவோம், கொண்டாடி கொண்டே இருப்போம். திருவள்ளுவரின் வெள்ளி விழா, கண்ணாடிப் பாலம் திறப்பு விழா, வெள்ளி விழா மலர் வெளியீடு, திருக்குறள் கண்காட்சி, திருவள்ளுவர் தோரணவாயல் அடிக்கல் நாட்டுதல் என இன்று ஐம்பெரும் விழா நடைபெறுகிறது. திருவள்ளுவரையும், திருக்குறளையும் சொல்லிலும், செயலிலும், நெஞ்சிலும் தூக்கி சுமந்த இயக்கம் திராவிட இயக்கம். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே சட்டமன்றத்தில் வாதாடி வள்ளுவர் படத்தை திறக்க வைத்தவர் கருணாநிதி. போக்குவரத்துறை அமைச்சர் ஆனதும் எல்லாப் பேருந்துகளிலும் திருக்குறளை எழுதினார்.

பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது எல்லா விடுதிகளிலும் திருவள்ளுவரின் புகைப்படங்களை இடம்பெற செய்தார். காவலர் பதக்கத்தில் வள்ளுவரின் படத்தை பொறித்தார். மயிலாப்பூரில் திருவள்ளுவர் நினைவாலயம் அமைத்தார். சென்னையில் வள்ளுவர்கோட்டம் கண்டார். குறளோவியம் தீட்டினார். திருக்குறளுக்கு உரை எழுதினார். இவ்வாறு திருக்குறளுக்காகவே வாழ்ந்தார்.

பல தடைகளுக்கு பின் இந்த சிலை அமைக்கப்பட்டது. 7 ஆயிரம் டன் எடை கொண்ட வள்ளுவர் சிலையை பாறையில் தூக்கி நிற்கவைத்ததே பெருமை. அறத்துப்பால் அதிகாரங்களை குறிக்கும் வகையில் வள்ளுவர் சிலையின் பீடம் 38 அடியாக இருக்கிறது. மீதமுள்ள 95 அதிகாரங்களை பிரதிபலிக்கும் வகையில் சிலை உயரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் பார்த்து பயனடைவதற்காக, படகு சவாரியை மேம்படுத்தும் வகையில் 3 புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும். முதல் படகுக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரும், 2வது படகுக்கு மார்ஷல் நேசமணி பெயரும், 3வது படகுக்கு ஜி.யு.போப் பெயரும் சூட்டப்படும்.

ஆர்வமும், புலமையும் மிக்க ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி வழங்கி ஒவ்வொரு மாவட்டத்திலும் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். திருக்குறள் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெறும் திட்டம் வகுக்கப்படும். இதற்காக ஆண்டுக்கு மாவட்டத்திற்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும். ஆண்டுக்கு133 உயர்கல்வி நிறுவனங்களில் திருக்குறள் தொடர்பான கலை, இலக்கிய, அறிவுசார் போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்த திட்டமிடப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் இறுதி வாரம், குறள் வாரம் கொண்டாடப்படும். தமிழ் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான திருக்குறள் மாணவ மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும். அரசு அலுவலகங்களில் இருப்பது போல், தனியார் நிறுவனங்களிலும் திருக்குறளும், உரையும் எழுதுவதற்கு ஊக்குவிக்கப்படும். கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். காவி சாயம் பூச நினைக்கும் எண்ணங்களை வள்ளுவம் விரட்டியடிக்கும்” எனப் பேசினார்.

Tags :
Advertisement