"தமிழர்களின் நிலம் திருப்பி ஒப்படைக்கப்படும்" - இலங்கை அதிபர் உறுதி !
இலங்கையில் விடுதலைப்புலிகள் மற்றும் சிங்கள ராணுவத்துக்கு இடையேயான உள்நாட்டு போர் தொடங்கிய 1980களில் இருந்து அரசாங்கம் தமிழ் மக்களின் நிலங்களை ராணுவ நோக்கத்துக்காக கையகப்படுத்தியது.
குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் நகரில் 3,500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை அரசு கையகப்படுத்தியது. 2009ல் போர் முடிவுக்கு வந்த பின் 2015 முதல் கையகப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட சில நிலங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. எனினும் தமிழ் மக்களுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலம் இன்னும் அரசு கைவசமே உள்ளது.
இந்த நிலையில் இலங்கை அதிபராக பதவியேற்றதற்கு பின் முதல் முறையாக அனுரா குமார திசநாயகா நேற்று யாழ்ப்பாணம் நகருக்கு சென்றார். அங்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் பல்வேறு பிரதிநிதிகளுடன், யாழ்ப்பாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது அவர் ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வடக்கு தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக அவர்களிடம் திருப்பித் தரப்படும் என்று உறுதியளித்தார். நிலங்களை ஒப்படைக்கும் செயல்முறையை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.