திமுக ஆட்சியில் கொசஸ்தலை ஆறு கவனிப்பாரின்றி உள்ளது - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
”தமிழ் நாடு மீஞ்சூர் அருகேயுள்ள கொசஸ்தலை ஆற்றின் கரைகள் மண் அரித்தும், செடிகள் மண்டியும் சிதிலமடைந்து காணப்படுவதால் வடகிழக்கு பருவமழையின் போது மண்சரிவு ஏற்பட்டு அப்பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சி அளிக்கின்றன. தமிழகத்தின் நீர்நிலைகளை, ஆளும் திமுக அரசு எத்தனை அலட்சியத்துடன் கையாள்கிறது என்பதற்கான மற்றொரு சான்று இது.
கடந்த நான்காண்டுகளாக தொழிற்சாலைக் கழிவுகள், எண்ணெய்க் கழிவுகளால் மாசடைந்து மஞ்சள், கருப்பு என நேரத்திற்கு நேரம் நிறம் மாறிக் கொண்டிருக்கும் கொசஸ்தலை ஆறு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்படும் வெள்ளப்பாதிப்பிற்கு முக்கியக் காரணியாக உள்ளது.
தனிக்கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டிய கொசஸ்தலை ஆற்றின் மராமத்துப் பணிகளை ஆமை வேகத்தில் நகர்த்திக் கொண்டிருக்கிறது.தமிழகத்தின் தலைநகருக்கு அருகே இருக்கும் நீர்நிலைகளையே சரிவரப் பராமரிக்கும் திறனற்ற திமுக அரசு, மற்ற மாவட்டங்களின் கடைக்கோடி கிராமங்களில் உள்ள நீர்நிலைகளை எப்படிக் கையாளும்? திமுகவின் நிர்வாகக் குளறுபடிகளுக்கு பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாவதை இனியும் அனுமதிக்க முடியாது. எனவே, இத்தனை ஆண்டுகளாக வெற்று விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஆளும் அரசு, ஆட்சியின் இறுதி காலத்திலாவது கேட்பாரற்று கிடக்கும் கொசஸ்தலை ஆற்றின் கரைகளைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதில் கவனம் செலுத்த வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்”
என்று தெரிவித்துள்ளார்.