"தி கேரளா ஸ்டோரி Vs மணிப்பூர் ஸ்டோரி" - கேரளாவில் பாஜகவுக்கு பதிலடி கொடுத்த பேராயர்கள்!
கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த வாரம் ‘தி கேரளா ஸ்டோரி’ தூர்தர்ஷனில் ஒளிப்பரப்ப பட்டதையடுத்து, ‘மணிப்பூர் கலவரம்’ தொடர்பான ஆவணப்படம் கேரள தேவாலயங்களில் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது.
சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ கடந்த ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது. தென் மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் “சுமார் 32,000 பெண்களின்” பின்னணியில் உள்ள நிகழ்வுகளை “கண்டுபிடிப்பதாக” இப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் மதம் மாறி பின்னர் தீவிரவாதிகளாக மாறியதாகவும், இந்தியாவிலும் உலகிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் படம் தவறான செய்தியை சித்தரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் கேரளாவில் இப்படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் போராட்டங்களுக்கு இடையே, படத்தின் வெளியீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது.
“பிளவுபடுத்தும் கருத்துகளை கொண்ட ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை ஒளிபரப்ப ‘டிடி நேஷனல்’ எடுத்த முடிவு மிகவும் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி, பாஜக – ஆர்எஸ்எஸ் கூட்டணியின் பிரச்சார இயந்திரமாக மாறக்கூடாது. பொதுத் தேர்தலுக்கு முன்பு வகுப்புவாத பதற்றங்களை அதிகரிக்க முற்படும் ஒரு திரைப்படத்தைத் திரையிடுவதை திரும்பப் பெற வேண்டும். வெறுப்பை விதைக்கும் இத்தகைய தீங்கிழைக்கும் முயற்சிகளை எதிர்ப்பதில் கேரளா உறுதியாக இருக்கும்” என குறிப்பிட்டிருந்தார்.
கற்பனையான 'தி கேரளா ஸ்டோரி' படத்தை திரையிடும் போது ஏன் உண்மை சம்பவமான 'மணிப்பூர் கலவர ஸ்டோரியை மக்களுக்கு காண்பிக்க கூடாது? மக்கள் மணிப்பூரில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று தேவாலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் கிறிஸ்தவர்கள் 18% உள்ளனர். இந்நிலையில் மணிப்பூர் கலவர ஆவணப்படம் கேரளாவில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.