"தங்கத்தை விட கலைமாமணி பட்டத்திற்குதான் மதிப்பு அதிகம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழக அரசின் சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் 2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது,
"விருது பெற்ற கலைமாமணி அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். ராக்கெட் வேகத்தில் ஒரே நாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை ஏறுகிறது. இந்த விருது அறிவிக்கப்பட்ட நாளின் தங்கத்தின் விலையையும், இன்றைய விலையையும் ஒப்பிட்டு பார்த்தாலே புரியும். தங்கத்தை விட கலைமாமணி பட்டத்திற்குதான் மதிப்பு அதிகம். ஏனென்றால், இது தமிழ்நாடு வழங்கும் பட்டம். திராவிட மாடல் அரசு முத்தமிழ் கலைஞர்களை போற்றி வருகிறது. நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 உயர்த்தி வழங்குகிறோம்.
தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்துக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த நிதியை ரூ.3 கோடியில் இருந்து ரூ.4 கோடியாக உயர்த்தி வழங்கியுள்ளோம். 500 நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.10,000 வழங்கப்பட்டு வருகிறது. நலிந்த நிலையில் வாழக்கூடிய கலைமாமணி பெற்ற கலைஞர்களுக்கு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ. 1லட்சமாக உயர்த்தி வழங்கி வருகிறோம். பொங்கல் கலைவிழாவை அடிப்படையாக வைத்து இசைச்சங்கமம் மற்றும் கலைச்சங்கமம் கலைநிகழ்ச்சிகள் 38 மாவட்டங்களிலும் நடத்த ரூ.2 கோடி வழங்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம் 10 ஆயரத்திற்கு மேற்பட்ட கலைஞர்கள் பயன்பெற்றுள்ளனர். கலைமாமணி பெற்ற கலைஞர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அறிவித்துள்ளோம். மறைந்த புகழ்பெற்ற கலைஞர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. கலைஞர்களை போற்றும் அரசாக திராவிட மாடல் அரசு விளங்குகிறது"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.