மக்களவைத் தேர்தலின் போது ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மக்களவை தேர்தலின் போது ஓடும் ரயில்ல ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பான பாஜக அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகத்திற்கு ஆதரவான உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலின் போது ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதிமன்ற அனுமதியின்றி பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயத்தை விசாரணைக்கு அழைக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிசிஐடி மேல்முறையீடு செய்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 4 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில், கேசவ விநாயகத்தை நீதிமன்ற அனுமதியுடன் அழைக்க வேண்டுமென்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட நபருக்கு, ஒரு வாரத்திற்கு முன் நோட்டீஸ் வழங்கி அழைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த விசாரணையின் போது சிபிசிஐடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி, “சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவால் கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தான் சம்மன் அனுப்ப முடியுமா? 4 கோடி ரூபாய் வழக்கில் சம்பந்தப்பட்ட “ஹார்ட் டிஸ்க்” காணாமல் போய் உள்ளது. அதுகுறித்து விசாரிக்க வேண்டி உள்ளது. எனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து கேசவ விநாயகம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.