தூய்மை பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுத்த விவகாரம் - 2 பேர் பணியிட மாற்றம்!
தூய்மை பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுத்த விவகாரம் தொடர்பாக 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தஞ்சாவூர் கிராமப்புற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள கிராமப் பகுதியிலிருந்து தஞ்சை பழைய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் இவர்களை பேருந்தில் ஏற்ற ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மறுப்பதாகவும், இலவச பயணம் என்பதால் பெண்களை நடத்துநர்கள் ஏளனமாக பேசுவதாகவும், தூய்மை பணியாளர்கள் என்பதால் சகபயணிகள் பேருந்தில் ஏற மறுப்பதாக அவர்கள் தெரிவிப்பதாகவும் பழைய பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மேற்கு காவல் துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி ஆம்புலன்ஸ் மூலம் தூய்மை பணியாளர்களை பணி செய்யும் இடத்திற்கு அனுப்பி
வைத்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேருந்து நடத்துனர் யேசுதாஸ் மற்றும் பேருந்து நிலைய டைம் கீப்பர் ராஜா ஆகிய இருவரையும் பணியிட மாற்றம் செய்து துறைரீதியான நடவடிக்கை எடுத்துள்ளதாக கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.