ரூ.5 பார்லே-ஜி பிஸ்கெட் விலை காசாவில் ரூ.2,300... சர்க்கரை, காபி விலை இவ்வளவா?
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் போர் தொடங்கியது. 1 வருடத்தை தாண்டியும் நீடித்து வந்த இந்த போரை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் தலையீட்டால் நடப்பாண்டு ஜனவரியில் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் இரு நாடுகளில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்டது.
இதையும் படியுங்கள் : நிழலுக்காக ரோடு ரோலர் அருகே அமர்ந்த இன்ஜினியர்… நொடிப்பொழுதில் நடந்த விபத்து – மதுரையில் அதிர்ச்சி!
இஸ்ரேல், ஹமாஸ் இடையே சில வாரங்களாக போர் நிறுத்தம் அமலில் இருந்தது. இதனிடையே, போர் நிறுத்தத்தின் 2ம் கட்டத்தை அமல்படுத்த ஹமாஸ் வலியுறுத்தி வந்தது. 2ம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தப்படி காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும். ஆனால், முதற்கட்ட ஒப்பந்தத்தை நீட்டித்து மேலும் சில பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டுமென இஸ்ரேல் வலியுறுத்தி வந்தது.
இதனால், இரு தரப்புக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஒப்பந்தத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல மத்தியஸ்தம் செய்த நாடுகள் முயற்சித்தன. ஆனால், இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால், ஒப்பந்தத்தை முறித்த இஸ்ரேல், கடந்த மார்ச் 18ம் தேதி காசா மீது தாக்குதல்களை தொடங்கியது. போர் ஒருபக்கம் இருக்க மற்றொரு பக்கம் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
After a long wait, I finally got Ravif her favorite biscuits today. Even though the price jumped from €1.5 to over €24, I just couldn’t deny Rafif her favorite treat. pic.twitter.com/O1dbfWHVTF
— Mohammed jawad 🇵🇸 (@Mo7ammed_jawad6) June 1, 2025
இந்த நிலையில், இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் காசாவில் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், "நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இன்று ரவீஃப்புக்குப் பிடித்த பிஸ்கட் எனக்குக் கிடைத்தது. விலை 1.5 யூரோக்களிலிருந்து 24 யூரோக்களுக்கு (தோராயமாக ரூ.2,342) மேல் உயர்ந்தாலும், ரவீஃப்புக்குப் பிடித்த விருந்தை என்னால் மறுக்க முடியவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் காசாவில் 1 கிலோ சர்க்கரை ரூ.4,914க்கும், 1 லிட்டர் சமையல் எண்ணெய் ரூ.4,177க்கும், 1 கிலோ உருளைக்கிழங்கு ரூ.1,965க்கும், 1 கிலோ வெங்காயம் ரூ.4,423க்கும், 1 காபி கப் ரூ.1,800க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.