ஆங்கிலேயர்களுடன் கூட்டணி வைத்தது யார்? பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி!
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை முஸ்லிம் லீக்குடன் பிரதமர் மோடி ஒப்பிட்டது குறித்து பதில் அளித்துள்ள ராகுல் காந்தி, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்' போது, ஆங்கிலேயர்களுடன் கூட்டணி வைத்தது யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்ட போது "காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த முஸ்லிம் லீக்கின் சிந்தனையுடன் ஒத்துப்போவதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது. மேலும் கம்யூனிஸ்டு மற்றும் இடதுசாரி சிந்தனைகள் மேலோங்கி உள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் அறிக்கை போல் இருப்பதாக மோடி கூறிய விமர்சனத்திற்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. அந்த புகாரில், "பிரதமரின் பேச்சுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாக உள்ளது. முஸ்லீம் லீக் கட்சியை தங்களது தேர்தல் அறிக்கையுடன் ஒப்பிட்டு மோடி பரப்புரையில் ஈடுபடுகிறார். மத அரசியலை முன்வைத்து நாட்டில் பிளவுவாதத்தை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி வருகிறார். இவ்வாறு மோடி பிரச்சாரம் செய்வதை தடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், முஸ்லிம் லீக்கின் சிந்தனையுடன் ஒத்ததாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது என பிரதமர் மோடி பேசியதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்து X தள (ட்விட்டர்) பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் X தள (ட்விட்டர்) பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தத் தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போர்! ஒரு பக்கம், இந்தியாவை எப்போதும் ஒருங்கிணைத்த காங்கிரஸும், இன்னொரு பக்கம் மக்களைப் பிளவுபடுத்த முயல்பவர்களும் இருக்கிறார்கள்.
நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் செயற்படும் சக்திகளுக்கு யார் பக்கபலமாக நின்றார்கள்? யார் ஒற்றுமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடினார்கள்? என்பதை வரலாற்று நிகழ்வுகள் காட்டுகின்றன.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்' போது, ஆங்கிலேயர்களுடன் கூட்டணி வைத்தது யார்? இந்தியாவின் சிறைகள் காங்கிரஸ் தலைவர்களால் நிரப்பப்பட்டபோது, நாட்டைப் பிளவுபடுத்திய சக்திகளுடன் சேர்ந்து மாநிலங்களில் ஆட்சி செய்தது யார்?
அரசியல் மேடைகளில் பொய்கள் பரப்பப்பட்டாலும் வரலாறு மாறாமல் உள்ளது.
இவ்வாறு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.