எம்.பி.க்கள் நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்! மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அனைத்து எம்.பி.க்களுக்கும் கடிதம் வாயிலாக விளக்கம்!
நாடாளுமன்ற அத்துமீறலுக்கும், எம்.பி.க்கள் நீக்கம் செய்யப்பட்டதற்கும் தொடர்பில்லை. நாடாளுமன்றத்தின் மாண்பை நிலைநிறுத்தவே 13 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என அனைத்து எம்.பி.க்களுக்கும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார்.
2001-இல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற 22-ஆம் ஆண்டு தினமான புதன்கிழமை, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள மக்களவையில் இரு இளைஞா்கள் பாா்வையாளா் மாடத்திலிருந்து குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். அவா்களை எம்.பி.க்கள் பிடித்து பாதுகாவலா்களிடம் ஒப்படைத்தனா். அதுபோல, நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியேயும் இருவா் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நீலம் தேவி, அமோல் ஷிண்டே, சாகா், மனோரஞ்சன் ஆகிய நால்வரையும் போலீஸாா் உடனடியாக கைது செய்து சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் (ஐபிசி) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனா். பின்னா், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான லலித் ஜா டெல்லியில் வியாழக்கிழமை (14.12.2023) இரவு போலீஸாா் கைது செய்தனா். தற்போது இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆறாவது நபரான மகேஷ் குமாவத்தை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது.
பல மணி நேரம் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டதற்கு பின், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் நகௌர் மாவட்டத்தைச் சேர்ந்த இவரும், டிசம்பர் 13ஆம் தேதி டெல்லி வந்துள்ளதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் புகைக் குப்பி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக அனைத்து எம்.பி.க்களுக்கும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யவும் குழு அமைத்துள்ளேன். நாடாளுமன்ற அத்துமீறலுக்கும், எம்.பி.க்கள் நீக்கம் செய்யப்பட்டதற்கும் தொடர்பில்லை. நாடாளுமன்றத்தின் மாண்பை நிலைநிறுத்தவே 13 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். எனவே, ஆரோக்கியமான விவாதம் நடைபெற அனைத்து எம்.பி.க்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.