“தமிழின் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெற்ற தொல்லியல் துறை நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் ‘இரும்பின் தொன்மை’ என்னும் நூலினை வெளியிட்டார். மேலும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அமையவுள்ள அருங்காட்சியங்களுக்கான அடிக்கல்லும் நாட்டினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,
“சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள நமது வாழ்வியலை திமுக மேடைகள் மூலம் எடுத்துக் கூறினோம். இலக்கியங்கள் படைத்தோம். இந்த விழாவில் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறினேன். தமிழர்களின் தொன்மையை உலகத்திற்கு எடுத்துக்கூறும் வகையில் ஒரு மாபெரும் ஆய்வு பயணத்தை அறிவிக்கிறேன். தமிழின் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது. 5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமானது. தற்போது தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் மூலம் அது நிரூபணம் ஆகியுள்ளது.
அண்மையில் கிடைக்கப்பெற்ற கால கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலக்கட்டத்தை கிமு.4 ஆயிரம் ஆண்டின் முற்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளது. தமிழ்நாடு தொல்துறை ஆராய்ச்சி துறையால் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உலகின் புகழ்பெற்ற ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அனைத்து ஆய்வகங்களிலிருந்தும் ஒரே மாதிரியான முடிவுகள் பெறப்பட்டன. தற்போது கிடைத்துள்ள கதிரியக்க கால கணக்கீடுகள் அடிப்படையில் கிமு.3345-லேயே தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமானது தெரியவருகிறது.
இந்த பகுப்பாய்வு முடிவுகள் வெளிநாடு மற்றும் இந்தியவாழ் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் இரும்பின் தோற்றத்தையும், பண்டைய தொழில்நுட்பத்தையும் ஆய்வு செய்து வருபவர்கள்.
இவர்கள் அனைவரும் ஒருசேர தமிழ்நாடு அரசையும், தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்படும் தொல்லியல் துறையின் ஆய்வுகளையும் பாராட்டியுள்ளனர். இவை அனைத்தையும் தொகுத்தே ‘இரும்பின் தொன்மை’ என்ற நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.
தொல்லியல் அறிஞர்களின் கருத்துகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. உலகளவில் இரும்புத்தாதுவில் இருந்து இரும்பை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் அறிமுகமானது என்பதை பெருமிதத்தோடு கூறுவோம். 5300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டதை அறிவியல் ரீதியாக நிரூபித்துள்ளோம் என மட்டற்ற மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். இது தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழினத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை.
இதுவரை சொல்லி வந்தவை ஏதோ இலக்கியப் புனைவுகள் அல்ல, அரசியலுக்காகச் சொன்னவை அல்ல, வரலாற்று ஆதாரங்கள்!. உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என்பதை மெய்ப்பிக்க வேண்டிய கடமையை இந்த திராவிட மாடல் அரசு எடுத்துக் கொள்கிறது. பழம்பெருமைகளை பேசுவது என்பது புதிய சாதனைகளை படைக்க ஊக்கமாக அமைய வேண்டும்” என தெரிவித்தார்.