“ஞானவேல் ராஜாவின் பேட்டி கடுங்கோபத்தை தருகிறது!” - அமீருக்கு ஆதரவாக எழுத்தாளரும் இயக்குநருமான சந்திரா தங்கராஜ் கருத்து!
ஞானவேல் ராஜாவின் பேட்டி கடுங்கோபத்தை தருகிறது என எழுத்தாளரும் இயக்குநருமான சந்திரா தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக சமூக ஊடகங்களில் இயக்குநர் அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறிய பொய் குற்றச்சாட்டுகள் பேசும் பொருளாகி இருக்கின்றன.
இயக்குனர் அமீர் என்னுடைய குரு. அவரோடு உதவி இயக்குனராக ராம் ,பருத்தி வீரன் மற்றும் அவர் தயாரித்து நடித்த யோகி படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறேன். அமீர் என்னுடைய ஆசான் என்பதில் எனக்கு எப்போதும் பெருமிதம் உண்டு. "ராம்" திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் இருந்தே அவரைப் பார்த்து வியந்து கொண்டிருந்தேன். எதைச் சொல்லப்போகிறோம் என்பதில் அவருக்கு கொஞ்சமும் தயக்கம் இருந்ததில்லை..
அப்படி புதிதான ஒன்றாக உருவாக்கபட்டதுதான் பருத்தி வீரன். அவர் பருத்தி வீரனை உருவாக்கிய விதத்தை பார்த்து நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த படப்பிடிப்புக் குழுவே வியந்துதான் பார்த்துக் கொண்டிருந்தது.
நாம் ஒரு சிறப்பான படத்தில் வேலை செய்கிறோம் என்ற தெளிவு படப்பிடிப்பு தளத்தில் எல்லோரிடமும் இருந்தது. அதற்காகவே இயக்குனர் சொல்வதை மறுபேச்சின்றி செய்து கொண்டிருந்தோம். படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் அவர் சொல்லியதைதான் செய்தார்கள். பருத்தி வீரன் காலகட்டத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது அவர் இருபது மணி நேரம் வேலை செய்திருப்பார். அவர் உட்கார்ந்த இடத்தில் அமர்ந்து படத்தை இயக்கவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் தன் உடலை மனதை நடிப்புக்கு கொண்டு வந்தே நடிகர்களை இயக்கினார். ஒவ்வொரு ஷாட்டிலும் ஒவ்வொரு டேக்கிலும் நடிகர்களுக்கு விளக்கி கொண்டே இருந்தார். நடித்து காட்டிக் கொண்டே இருந்தார். உழைப்பு உழைப்பு உழைப்பு மட்டுமே..
படப்பிடிப்பு முடிந்த பின் ஹோட்டல் அறைக்கு திரும்பியதும், மறுபடியும் அடுத்த நாள் காட்சிகளை நடிகர்களுக்கு விளக்குவது .. உதவி இயக்குனர்கள், தொழில் நுட்ப கலைஞர்களோடு அடுத்த நாள் திட்டத்தை பேசுவது என்று எப்போதும் உழைத்துக் கொண்டே இருந்தார். இவ்வளவு உழைப்புக்கு மத்தியில் இன்று படப்பிடிப்பு நடக்குமா? இல்லையா? என்று ஒவ்வொரு நாளும் பணப்பற்றாக்குறையில் பெரும் போராட்டத்தை சந்திப்பார். பருத்தி வீரன் படப்பிடிப்பில் வேலை செய்த யாரை கேட்டாலும் அதை சொல்வார்கள். ஞானவேல் ராஜாஒரு பேட்டியை கொடுத்து, இயக்குநர் அமீரின் உழைப்பை, படைப்பின் மேன்மையை உதாசீனப்படுத்தும்போது கடுங்கோபம் வருகிறது.