‘ராஜேஷ் தாஸை கைதுக்கான இடைக்கால தடை தொடரும்’ - உச்சநீதிமன்றம்!
2 வாரங்களுக்குள் ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு மனுமீது பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக, ஓய்பு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி உறுதி செய்தது.
இதையடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையில் இந்த வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது எனக் கூறி, விழுப்புரம் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
கடந்த மே மாதம் 17ஆம் தேதி இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தும், மனுவுக்கு பதிலளிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த மனுமீதான விசாரணை நீதிபதி பீலா.எம்.திரிவேதி தலைமையிலான அமர்வில் இன்று நடைபெற்றது. அப்போது மனுமீது பதிலளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.
கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும் வழக்கு இரண்டு வாரத்திற்கு பின் விசாரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ராஜேஷ் தாஸை கைது செய்ய கூடாது என்ற இடைக்காலத் தடை உத்தரவும் தொடரும் என உத்தரவிட்டுள்ளனர்.